அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளேன் : கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கோத்தபாய தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

godapaya rajapakse gota

தான் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தனக்கான நிதியுதவிகளை செய்யுமாறு, கோத்தபாய வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் ஆர்வம் கொண்ட வர்த்தகர், எந்த கட்சியில் போட்டியிடவுள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

மலர் மொட்டை சின்னமாக கொண்ட கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தனக்கு மாத்திரம் வாய்ப்புள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

கோத்தபாய அரசியல் ஈடுபடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அதனொரு கட்டமாக கோத்தபாயவினால் “வியத் மக” என்ற அமைப்பின் ஊடாக நாடு முழுவதும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் தனக்கான ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கோத்தபாய இவ்வாறு செயற்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் கோத்தபாயவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சமகால அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடைந்து, கோத்தபாயவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறானதொரு நிலைக்கு கோத்தபாய முகங்கொடுப்பாராயின் கோத்தபாயவின் இலங்கைக்கான குடியரிமை இரத்துச் செய்யப்படும். இதன்மூலம் கோத்தபாயவின் ஜனாதிபதி கனவு பலிக்காமல் போகும்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க – இலங்கை நாடுகளின் குடியுரிமையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.