இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் தணிய வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

india-america-pakistan-flagஇந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பலியாகினர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இரு நாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதட்டம் தணிய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா- பாகிஸ்தான் ராணுவத்தின் இடையே தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டம் தணிய வேண்டும், அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகர் சூசன் ரைஸ் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இது குறித்து நேற்று பேசினார். அப்போது எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை அமெரிக்க ஆதரிக்காது என தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஐ.நா. சபையில் தடைசெய்யப்பட்ட லஸ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா போராடி வருகிறது.

இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சுய கட்டுப்பாட்டுடன் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.