அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள்

சக்கீப் அஹமட் 

 

 அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் வைத்து பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

rauff hakeem slmc

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் – நாளைய தினம் நடமாடும் சேவை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, குறித்த சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேற்படி நடமாடும் சேவையின் பின்னர், அங்கு வைத்து – அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மு.கா. தலைவர் ஹக்கீம் முக்கியமான அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலுக்கான பிரசார மேடைகளிலும், அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் பேசிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; “அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவேன்” என உறுதியளித்திருந்தார்.

ஆயினும், தேர்தல் முடிந்து – ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கால தேர்தல் மேடைகளிலும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, பகிரங்கமாக வாக்குறுதியளித்த மு.கா. தலைவர் ஹக்கீம், பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் – அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றியமை நினைவுகொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், இம்முறை அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, நாளைய நடமாடும் சேவையின் பின்னர், மு.கா. தலைவர் அறிவிக்கவுள்ளார் என வெளிவரும் செய்திகளை அடுத்து, இப்பிரதேச மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.