மர்யம் (அலை) அவர்களின் கவலையும் இறைவன் தந்த ஆறுதலும்

மர்யம் (அலை) அவர்கள் ஈஸாவை கருக்கொண்டார்கள். அதன் காரணமாக அவர் உடலில் மாறுதலை உணர்ந்தார்கள். கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட ஆரம்பித்ததும், அவர்கள் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள வேறிடத்திற்குச் சென்று தங்கிவிடுகிறார்கள்.

பின்பு அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை மர்யம் (அலை) அவர்களை ஒரு பேரீச்சை மரத்தின் கீழ் கொண்டு வந்தது.

சுற்றார் மதிக்கும்படியான நல்ல குடும்பத்தில் பயபக்தியுடையவராக இருந்த தமக்குக் கணவரில்லாமல் குழந்தை பிறக்க இருப்பதை எண்ணி கலங்கினார்கள். ‘நானும், என் குழந்தையும் என்னவெல்லாம் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியான கேள்விகளை எதிர்கொள்வதற்கு முன் நான் இறந்து, முற்றிலும் மக்களால் மறக்கப்பட்டவளாகிவிடக் கூடாதா?’ என்று பிரசவ வேதனையில் தமக்குத் தாமே அரற்றிக் கொண்டிருந்தார்கள்.

வலி தாங்க இயலாமல் அரற்றி பேரீச்சை மரக்கிளையைப் பிடித்துக் கொண்டார்கள். குழந்தை பிறந்தது.

அப்போது அவருக்கு கீழிருந்து ஒரு குரல் கேட்டது “மர்யமே! கவலைப்படாதீர்கள். உங்கள் கவலைகளை இறைவன் தீர்த்து வைப்பான். உங்களுக்குக் கீழேயே ஒரு சின்ன ஆற்றை உங்களுக்காக இறைவன் உண்டாக்கியிருக்கின்றான். இந்தப் பேரீச்சை மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்குங்கள். அது கொய்வதற்குப் பக்குவமான பழங்களை உங்கள் மீது உதிர்க்கும். அவற்றை உண்டு, ஆற்று நீரைப் பருகி, கண் குளிர்ந்து இருங்கள். பின்னர், யாரேனும் உங்களிடம் ஏதாவது கேள்வி் கேட்டால், பேசினால், அல்லாஹ்வுக்காக நீங்கள் நோன்பிருப்பதாக நேர்ந்திருப்பதால் அன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டது.

பெற்றெடுத்த குழந்தையுடன் தம் ஊருக்கே தம் சமூகத்தாரிடம் திரும்பினார்கள் மர்யம் (அலை).

அல்லாஹ்தான் படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன். அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே துதி (தஸ்பீஹு) செய்கின்றன. அவனே யாவற்றையும் மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

திருக்குர்ஆன் 19:23-27, 59:24

– ஜெஸிலா பானு.