அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: 7 சதவீத கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னணி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் (70) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.  மேலும் அங்கு தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையில் மான்மவுத் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு 46 சதவீதம் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 7 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்று ஹிலாரி முன்னணியில் உள்ளார்.

 

Hillary Clinton Begins New Hampshire Election Campaign

அத்துடன், கட்சியினர் ஆதரவு என்ற வகையில் பார்த்தால், ஹிலாரி கிளிண்டனுக்கு ஜனநாயக கட்சியில் 85 சதவீதம் பேரின் ஆதரவு உள்ளது. இதே போன்று, டொனால்டு டிரம்புக்கு குடியரசு கட்சியில் 78 சதவீதத்தினரின் ஆதரவு இருக்கிறது.
எந்த சார்பும் இல்லாதவர்கள் மத்தியில் ஹிலாரிக்கு 37 சதவீதம் பேரின் ஆதரவும், டிரம்புக்கு 32 சதவீதம் பேரின் ஆதரவும் உள்ளது.

த்ரி எமர்சன் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், ஓஹியோ மாகாணத்தில் இருவரும் சம பலத்தில் (தலா 43 சதவீத ஆதரவு) இருப்பது தெரிய வந்துள்ளது.

மிச்சிகனில் ஹிலாரிக்கு டிரம்பை விட 5 சதவீதம், பென்சில்வேனியாவில் 3 சதவீதம் கூடுதல் ஆதரவு உள்ளது. ஹப் போஸ்ட், யூ கவ் நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்புகளில், குடியரசு கட்சியினரில் 54 சதவீதம்பேர் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் சரியான தேர்வு இல்லை என கருத்து கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜனநாயக கட்சியில் 56 சதவீதம் பேர் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.