உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 622 கோடி வறட்சி நிதி : மத்திய அரசு ஒப்புதல்

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வருடத்தில் வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு ரூபாய் 716.59 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் ஆய்வு நடத்திய மத்திய குழு அளித்த அறிக்கையின் மூலம் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேசத்திற்கு மட்டும் ரூபாய் 622.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூபாய் 79.18 கோடியும், மணிப்பூர் மாநிலத்திற்கு ரூபாய் 14.65 கோடியும் ஒதுக்கியுள்ளது.

இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, வேளாண்மைத்துறை மந்திரி, மத்திய உள்துறை செயலாளர், உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு மத்திய அரசு வறட்சி நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.