நேபாளத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 54 பேர் பலி!

201607271602532087_54-killed-thousands-displaced-in-flood-and-landslides-in_SECVPFநேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை உடைத்துகொண்டு ஊர்களுக்குள் புகுந்தது.

இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சப்தகோஷி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த ஆற்றில் உள்ள 56 மதகுகளில் 37 திறந்து விடப்பட்டன.

வேகமாக பாய்ந்தோடி வந்த வெள்ள நீரால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சப்தகோஷி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாராயணி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் நேபாள ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.