முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி – அமைச்சர் றிசாத்

சுஐப் எம் காசிம்

 

13689744_617898171709565_1648007034_n_Fotor

 

 சிறைச்சாலைகளில் முஸ்லிம் சகோதரர்கள் 28 சதவீதமானோர் தமது காலத்தை அவமே கழித்து வருகின்றனர். அதே வேளை கல்வித் துறையில் நமது சமூகத்தில் உயர் பதவி வகிப்போர் 3 சதவீதத்திலும் குறைவானவர்களாகவே காணப்படுவது கவலைக்குரிய விடயம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

திகன-ஹிஜ்ராபுர இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் தும்பர பள்ளிச் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கல்விதான் நமது சமூகத்தின் அழியாத சொத்து. ஆனால் கல்வித்துறையில் நாம் இன்னுமே பின்னடைவிலேயே இருக்கின்றோம். ஆனால் நமது சமூகத்தின் இளைஞர்களில் ஒரு சாரார் இஸ்லாமிய வழிமுறைகளுக்கு மாற்றமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு சமூகத்துக்கு அவப்பெயரையும் பெற்றோருக்கு இழுக்கையும் தேடித் தருவதோடு தாமும் சிறைகளிலே வாடுகின்றனர். ஆய்வுகளின்படி மெகசீன், வெலிக்கடை சிறைச்சாலைகளில் சுமார் 505 முஸ்லிம்கள் ஆயுட்கால தண்டனை அனுபவிக்கின்றனர். இந்த நிலைமைக்கு வறுமை மட்டும் காரணமல்ல. சரியான வழிகாட்டல் இன்றி அவர்கள் வாழ்ந்து வருவதனால்தான் இந்த கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகின்றது.

 

13706209_617898281709554_2113476479_n_Fotor

 நமது சமூக அரசியல்வாதிகள் ஒருபுறம் உலமாக்கள் மறுபுறம் புத்திஜீவிகள் இன்னொருபுறம் என்று வௌ;வேறு திசைகளில் பணியாற்றுகின்றனர். சமூக சேவை இயக்கங்கள் தமக்குள் முட்டி மோதிக்கொண்டு கருத்து முரண்பாடுகளை வளர்த்து கயிறிழுப்பு நடாத்தி வருகின்றனர். இந்த போக்கு நமக்கு ஒரு போதும் விமோசனத்தையோ விடிவையோ தரப்போவதில்லை. சமூக முன்னேற்த்துக்காக கொள்கைகளையும் கருத்து பேதங்களையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஒரே புள்ளியில் ஒன்று சேர்ந்து ஒருமித்து பயணம் செய்வதே ஆராக்கியமானது. அதன் மூலமே நமது சமூகத்தை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முடியும். இதுவே காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. 

தேர்தல் காலத்தில் மட்டும், வாக்குகளுக்காக மக்களைத் தேடிவந்து வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடாத்தும் இழிவான கலாசாரம் நமது சமூக அரசியல்வாதிகளிடமிருந்து நீங்க வேண்டும். தேர்தல் வந்தால் மட்டும் அரசியல்வாதிகள் செல்வந்தர்களை நாடிச் செல்வதும் செல்வந்தர்கள் தமது நோக்கங்களை அடைய அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்வதும் என்ற நிலை நம்மத்தியில் இருந்து இல்லாமல் போக வேண்டும். 

முஸ்லிம் சமூகம் இன்று இயற்கையின் தாக்கத்தினாலும் பல்வேறு கெடுபிடிகளினாலும் அநாதைகளாகவும் அகதிகளாகவும் வாழ்க்கை நடாத்தும் துயரமான நிலை இருக்கின்றது. ஏழைத் தாய்மார்களும் நமது சகோதரிகளும் ஒருவேளை சோற்றுக்காக வீதிக்கு வீதி பள்ளிவாசலுக்குப் பள்ளிவாசல் காத்திருந்து கைநீட்டும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நமது சமூகத்தில் உள்ள கொடை வள்ளல்களும் பரோபகாரிகளும் சமூக சேவை இயக்கங்களும் நன்முறையில் திட்டங்களை வகுத்து இந்த அவலத்துக்கு முடிவு கட்ட வேண்டியது அவசிய தேவையாகின்றது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற மனோ நிலையை மாற்றி பார்வையாளராக இராமல் சமூக விடயங்களில் கரிசனை கொள்ள வேண்டும். 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எம்மை உசுப்பேற்றும் கூட்டத்தினருக்கு நமது ஐக்கியத்தின் மூலமே தக்க பதிலை வழங்க முடியும். அத்துடன் சகோதர இனங்களுடன் நாம் பரஸ்பரம் ஒற்றுமையுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இனவாதிகளின் சவால்களை இலகுவில் முறியடிக்க முடியும். 

rishad rizad

 

நமது சமூகம் பல்வேறு விடயங்களில் பின்னடைவில் இருக்கின்றது. உதாரணமாக பாராளுமன்னறத்திலும் மாகாண சபைகளிலும் பிரதேச சபைகளிலும் சில முஸ்லிம் பிரதேசங்களில் பல பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் தமது பிரதேச மக்களுக்கு உதவுகின்றனர். அதே வேளை மக்களின் பிரதிநிதித்துவமே இல்லாத அதாவது பிரதேச சபையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத எத்தனையோ முஸ்லிம் கிராமங்களை நாம் காண்கின்றோம். இந்த மக்கள் பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற பரதேசிகளாக வாழ்கின்றனர். ஊரின் உட்கடமைப்பு வசதிகள், கல்வி வசதி, ஜீவனோபாயம், தொழில் ஆகியவற்றில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டும் கருத்திற்கு எடுக்கப்படாமலும் வாழ்ந்து வருவது நமது கண்ணுக்குப் புலப்படுவதில்லை.  முஸ்லிம் அரசியல் வாதிகள் இவர்கள் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும் இல்லை. தமது மாவட்டம், தமது பிரதேசம், தமது வாக்கு வங்கி என்ற மனோபாவம் ஒழியும் வரை இவ்வாறான மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. தமது கட்சிக்கு ஆள் சேர்க்கும் அரசியல் கலாசாரத்துடன் மட்டும் அரசியல்வாதிகள் நின்று விடாது இந்த மக்களின் பரிதாபத்தை கருத்திற் கொள்வது காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக தும்பர வெளிக்களப் பயிற்சி நிலைய சுயதொழில் பயிற்சி நெறி மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்;சியையும் தாருர் ரஹ்மா பெண்கள் அமைப்பினால் “விவாகரத்தை வெறுப்போம். கணவன் பிள்ளைகளுடன் ஒற்றுமையாக வாழ்வோம்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சியையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்து வைத்து கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி தையல் இயந்திரங்களையும் மற்றும் பல்வேறு உதவிகளையும் வழங்கி வைப்பதாகவும் உறுதியளித்தார்.