இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை வெற்றி பெறாது : துருக்கி ஜனாதிபதி எர்டோகன்

துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவத்தை பொதுமக்கள் வீதியில் இறங்கி வந்து எதிர்த்து நிற்க வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கி ராணுவத்தின் திடீர் ஆட்சி கவிழ்ப்பினை தாம் ஆதரிக்கவில்லை எனவும், இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஸ்கைப் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியின் ஜனாதிபதியாக தாம் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், ராணுவத்தின் தலைமையும் தாமே எனவும் தெரிவித்துள்ள எர்டோகன், துருக்கி ராணுவத்தின் ஒரு சிறு பகுதியினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

turkey president

 

மக்கள் ஒன்று திரண்டு விமான நிலையங்கள் மற்றும் சதுக்கங்களில் கூடி ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும் எனவும், மக்கள் சக்திக்கு எதிராக எந்த சக்தியும் நிகரல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் உடனடியாக நாடு திரும்புவதாகவும் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனவும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை வெற்றி பெறாது எனவும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதியின் விமானத்தை துருக்கி விமான நிலையத்தில் தரையிரங்க அனுமதி மறுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.