பிழைதிருத்த வேண்டிய சாணக்கியங்கள் ..!!

rauff hakeem slmcமொஹமட் பாதுஷா 
  சாணக்கியம் என்பதற்கு தமிழ் அகராதியில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இதில் அநேக பொருட்கோடல்கள், தந்திரத்துக்கு மிக நெருக்கமானவையாக சாணக்கியத்தை விளக்கியிருக்கின்றன. ‘தந்திரம் கலந்த நகர்வுக்குரிய கௌரவமான சொல்’ என்று அதனைக் கூறலாம். ஆனால், இந்தச் சொல்லை முஸ்லிம்களுக்கு அதிகம் பரிச்சயப்படுத்தியது தமிழ் இலக்கணம் அன்றி, முஸ்லிம் அரசியலே எனலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே இந்தச் சொல்லை வார்த்தைக்கு வார்த்தை மேடைகளில் பயன்படுத்திவருகின்றது.
சாணக்கியம் என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் கட்சித் தலைவர் என்றால், அவர் ரவூப் ஹக்கீமே எனலாம்.  இவ்வாறு தன்னை விழித்துக் கொள்ளும் தலைமையோ, கட்சியின் உறுப்பினர்களோ, சாணக்கியமான அடிப்படையில் எவ்வாறான தீர்மானங்களை, வரலாற்று முக்கியத்துவம்மிக்க நகர்வுகளை கடந்த 16 வருடங்களில் கட்சி எடுத்திருக்கின்றது என்பதைப் பட்டியலிட்டுக் கூறியதில்லை. அமைச்சுப் பதவிகளைப் பெற்று பங்கிட்டுக் கொண்டதையும் தேசியப்பட்டியல் எம்.பிக்காக ஆளுக்காள் முரண்பட்டுக் கொண்டதையும், கொந்தராத்துக்காகவும் வேறு சில வரப்பிரசாதங்களுக்காகவும் முண்டியடித்ததையும் கட்சி தாவியதையும் சாணக்கியம் என்று சொல்ல முடியுமென்றால், அந்த வார்த்தை இக்கட்சிக்குச் சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஆனால், சிறுபான்மை அரசியல் கட்சியொன்றின் சாணக்கியம் என்பது, சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நிபந்தனையின் படி நோக்கினால், கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் புல்லரித்துப் போகுமளவுக்கு சாணக்கிய சாதனைகள் எதனையும், அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர், மு.கா கட்சி செய்து காட்டவில்லை என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைப்பாடாகும்.  ‘சாணக்கியம்’, ‘தூரநோக்கு’ என்று எடுத்த பல தீர்மானங்கள், இந்தச் சமூகத்துக்கு நன்மை பயக்கும் விதத்தில் இருக்கவில்லை என்பதை, கட்சியின் முக்கியஸ்தர்களே ஏற்றுக் கொள்வார்கள்.
தனித்துவமான ஒரு கட்சி அவசியப்பட்ட காரணத்தினாலேயே மர்ஹூம் அஷ்ரப் மேலும் பலருடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸைத் தோற்றுவித்தார். மு.காவின் பெரு வளர்ச்சி, அப்போது ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக்கட்சியிலும் இணைந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த பலரை இனந்தெரியாத சூனியத்துக்குள் தூக்கி வீசியது. சமகாலத்தில், கொழும்பில் மையங்கொண்டிருந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம், தென்கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. முஸ்லிம் அரசியலில் நிகழ்ந்த மிகப்பெரும் கட்டமைப்பு மாற்றம் என்று இதைச் சொல்ல முடியும்.  ஆனால், இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, உண்மையான இயல்புகளோடு முஸ்லிம்களின் அடையாள அரசியல் இல்லை. மு.கா நிறுவப்படுவதற்கு முன்னர், பெரும்பான்மைக் கட்சியோடு இணைந்து கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எதைச் செய்தார்களோ, அதையே இன்று முஸ்லிம் கட்சிகள் எல்லாமே செய்து கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக, எந்தத் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸை தலைவர் அஷ்ரப் உருவாக்கினாரோ, அந்தப் பாதையில் இருந்து அக்கட்சி விலகிச் செல்வதைக் காணலாம். இதை, அக்கட்சியின் தவிசாளரே மறைமுகமாக அண்மையில் ஒத்துக் கொண்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம், நாம் மேலே சொன்னது போன்று ‘சாணக்கியமான தீர்மானங்கள்’ என்ற கோதாவில் எடுக்கப்பட்ட முட்டாள்தனமான, சுயநல முடிவுகளும் அதற்குத் துணை நின்றவர்களுமே என்பதில் கருத்து வேற்றுமைகள் இருக்க முடியாது.
சிலவேளைகளில், சாணக்கியம் பலிக்காமல் சறுக்கி விழ நேர்கின்ற சந்தர்ப்பங்களிலும் மீண்டும் எழுந்து நின்று மண்ணை துடைத்துக் கொண்டு ‘இதுவும் சாணக்கியம்’ என்று கூறுவது என்றால், சாணக்கியம் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்விளக்கத்தை நம்ப வேண்டிய நிலைமைக்கு நம்மை ஆளாக்குகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மிகவும் திறமையான ஒருவர். இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள் பட்டியலை நிரற்படுத்தினால், அநேகமாக அவர் முதல் நிலையில் இருப்பார் என்பதை மறுப்பதற்கில்லை. கிராமப் புறங்களில் இருக்கும் நல்ல பையன்கள் ‘கூடுவாரோடு கூடிக் கெட்டுப் போய்விட்டான்’ என பாட்டிமார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறே, ‘கேட்பார் புத்தி கேட்டு ரவூப் ஹக்கீமும் சமூகத்தை முன்னிலைப்படுத்தாது செயற்பட்டு வருகிறார்’ என அவரது அபிமானிகளே இப்போது தமக்குள் கழிவிரக்கம் கொள்கின்றனர். அதாவது, அவருக்கு அருகில் இருந்து கொண்டு தமக்கான பங்கைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லா விடயங்களுக்கும் ஆமா போட்டவர்கள், தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பெயரில் சமூகத்துக்கு எதிரான முடிவுகளுக்கு எல்லாம் உடன்பட்டுப் போனவர்கள் என்று ஏராளமானோர், ஹக்கீம் செய்த இந்தத் தவறுகளில் துணைப் பங்காளிகளாக இருந்திருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்பது, அமைச்சுப் பதவிகளுக்காகவும் சிலரது தலைமைத்துவ மோகத்துக்காகவும், கொடுக்கல்-வாங்கல்களுக்காகவும் உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது. ஆனால், இவற்றை இழந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனையோ பிழையான முடிவுகளை இந்தச் சாணக்கியம் எடுத்திருக்கின்றது. ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்காக ரெடிமேட் காரணம் ஒன்றை மக்களுக்குச் சொல்கின்ற மு.காவின் தந்திரம் அல்லது இராஜதந்திரம் இன்று வரையும் முஸ்லிம் சமூகத்துக்குள் பலித்துக் கொண்டுதான் இருக்கின்றமை மிகவும் மிகப் பெரிய கைசேதமே.
உதாரணமாக, திவிநெகும சட்டமூலத்துக்கு மு.கா, மத்தியிலும் மாநிலத்திலும் ஆதரவளித்தது. அது கூடப் பரவாயில்லை. மஹிந்த ராஜபக்ஷ இன்னுமொரு தடவை ஜனாதிபதியாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கிய 18ஆவது சட்டமூலத்தை அக்கட்சி ஆதரித்தது. இப்படி இன்னும் பல. இவையெல்லாம் எவ்வளவு மோசமான தீர்மானங்கள் என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஓர் ஆக்கபூர்வமான பிரதியுபகாரத்தை ஆளும் தரப்பிடமிருந்து பெற்று, முஸ்லிம்களுக்குக் கொடுப்பதற்குக் கூட மு.கா தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. வெளியில் தெரிந்தும் தெரியாமலும் ஆதாரத்துடனும் ஆதாரமின்றியும் எத்தனையோ காரியங்கள் இப்படியாக நடந்து போயின. அச்சந்தர்ப்பங்களில் எல்லாம் மு.காவின் ஆரம்பகால உறுப்பினர்களும் போராளிகளும் மக்களும் பொறுத்துக் கொண்டனர். ‘பிழை’ என்று தெரிந்தும் சகித்துக் கொண்டனர். காரணம், தம்முடைய எதிர்ப்பின் காரணமாக தம்முடைய கட்சி பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்றே அவர்கள் நினைத்தார்களேயன்றி, அது இன்னுமின்னும் தவறுகள் செய்வதற்கான அனுமதிப்பத்திரமல்ல. ஆனால், தலைவரினதும் அவரது வலது, இடது கைகளைப் போன்றவர்களினதும் நடவடிக்கைகள் மக்களை மனதிற் கொண்டதாக அமையவில்லை என்பது வெள்ளிடைமலை. ஐக்கிய தேசியக் கட்சியின் கலகெதர தேர்தல் தொகுதி அரசியல்,  கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை என்ற இரண்டு விடயங்களில் எதற்கு மு.கா தலைமை முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுகின்றது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிழக்கு முஸ்லிம்களின் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால், இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலின் கதையும் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ‘மு.காவின் தலைவர் என்கின்ற பதவி, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எனக்களித்த கிரீடம்’ என்று தேசிய மாநாட்டில் பேசிய தலைவர் ரவூப்; ஹக்கீம் சொன்னார். அது உண்மைதான், இணைத் தலைவராக இருந்த பேரியல் அஷ்ரபையும் தகுதியுடைய கிழக்கு மாகாண அரசியல்வாதிகளையும் புறந்தள்ளிவிட்டு, அந்தக் கிரீடத்தை கண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கிழக்கு முஸ்லிம்கள் சூட்டியிருப்பார்கள் என்றால், அதற்குப் பெரிய கைமாறு செய்திருக்க வேண்டும் இல்லையா? அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முன்னிற்க வேண்டுமில்லையா? ஆனால், அது நடந்ததாக மார்தட்ட முடியாது. கிழக்கு மக்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்காகவும் அதேபோல் ஏனைய முஸ்லிம்களுக்காகவும் குரல்கொடுப்பதை விடுத்து, கொழும்பில் ஒரு மேட்டுக்குடி அரசியல்வாதியாக இருப்பதற்கே ஹக்கீம் விரும்புகின்றாரோ என்று ஒரு சந்தேகம் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களிடையிலும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வளவு நடந்த பிறகும், மு.கா தலைவரும் அவருக்கு நெருக்கமானவர்களும், குற்றப்பரிகாரம் தேடுவதற்கு முன்வரவில்லை என்பதே, முஸ்லிம் அரசியலின் மிகப் பெரிய கைசேதமாகும்.
தலைவர் காசு பெற்றாரா அதைச் செயலாளர் கதைத்து திரிந்தாரா என்பதெல்லாம் மக்களுக்குத் தேவையற்ற பிரச்சினைகள். அது எப்போதென்றால், மக்களுக்கான சேவைகளைச் செய்து கொண்டிருக்கும் வரைக்கும் அதைப்பற்றி மக்கள் யோசிக்க மாட்டார்கள். முஸ்லிம்களின் அபிலாஷை எதுவோ, கட்சியின் கொள்கை எதுவோ அந்தப் பாதையில் கட்சி பயணிக்குமாக இருந்தால், சிறிய சிறிய தவறுகளை மக்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மக்களைக் கணக்கிலெடுக்காது, அவர்களை பேய்க்காட்டிக் கொண்டு காலத்தை ஓட்டுவது, காலாகாலத்துக்கும் சாத்தியப்படாது. மேலே நாம் குறிப்பிட்டது போன்று, முஸ்லிம்களுக்கு பாதகமான எத்தனையோ காரியங்களை ஏற்கெனவே செய்திருக்கத்தக்கதாக அதற்குப் பரிகாரம் செய்யாமல் தொடர்ந்தும், பூனை கண்ணைமூடிக் கொண்டு பாலைக் குடிப்பது மாதிரி மேற்கொண்ட தூரநோக்கற்ற சாணக்கிய (?) நகர்வுகளே மு.கா தலைவருக்கு இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளுக்கு காரணமாகும். இந்தத் தவறுகளின் சங்கிலித் தொடரில், தேசியப்பட்டியலுக்குப் பொருத்தமற்ற இருவரை நியமித்து, அதில் சல்மான் எம்.பியை இன்னும் இராஜினாமாச் செய்ய வைக்காமல் இருக்கின்றமை, செயலாளரின் அதிகாரங்களைக் குறைத்து உயர்பீட செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, மறைமுகமாக எல்லா அதிகாரங்களையும் தலைமையை நோக்கி ஈர்த்துக் கொண்டமை, செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதம், இரண்டு மௌலவிமார்களை உயர்பீடத்தில் இருந்து நிறுத்தியமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனால், அத்துடன் நீரில் அமிழ்த்தப்பட்டிருந்த பந்தாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மு.கா தலைமைக்கு எதிரான குரல்கள் இப்போது பரவலாக வெளிக்கிளம்பி இருக்கின்றன. ஹசன் அலியும் பஷீரும் கட்சிக்குள் இப்போது இருந்திருந்தால் இந்தச் சவால்களை இதைவிட இலகுவாக சமாளிக்க முடிந்திருக்கும் என்பதையும், வேலைக்கு உதவாத ஆட்களை அதிகளவில் தன்னோடு வைத்திருந்தாலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லையே என்பதையும் மு.கா தலைவர் இந்நேரம் உணர்ந்து கொண்டிருப்பார். இப்படியாக தனது போக்குகளாலேயே தலைமை சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. சாணக்கியம் வேலை செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளன. எம்.ரி.ஹசன் அலியின் உறுதியான நிலைப்பாடு, பஷீர் சேகுதாவூதின் அறிக்கைகளும் கடிதங்களும் ஹக்கீமுக்கு மிகப் பெரிய சிக்கல்களை தோற்றுவித்திருக்கின்றன. அதையே சமாளிக்க முடியாமல் சாணக்கியம் திணறிக் கொண்டிருக்க ‘கிழக்கின் எழுச்சி’ என்றொரு புதுக் கோஷமும் பிரசித்தமாகி இருக்கின்றது.  ‘மு.காவின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமிடம் இருந்து முஸ்லிம் காங்கிரஸை மீட்டு, கிழக்குக்குத் தலைமைத்துவத்தை கொண்டு வருதல்’ என்ற பிரகடனத்தோடு கிழக்கின் எழுச்சி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இது தொடர்பான சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக வலைத்தள பிரசாரங்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் உள்ள கிழக்கு மாகாணத்தவர்களில் ஒரு தொகுதியினரும் இதற்கு நாடுகடந்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு சமாந்திரமான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் கிழக்கின் எழுச்சி சம்பாதித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதற்கு காரணங்களும் உள்ளன. முஸ்லிம் காங்கிரஸை எதிர்த்து நின்ற எல்லோரும் விமர்சிக்கப்பட்டனர் என்ற அடிப்படையில் மட்டுமன்றி வேறு காரணங்களுக்காகவும் இந்தப் பிரசாரம் வேறு கண்கொண்டு பார்க்கப்படுவதாகத் தெரிகின்றது.  ஆயினும், இதற்கு முன்பு இடம்பெற்ற மு.கா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இருந்தும் கிழக்கின் எழுச்சி வேறுபடுவதையும் கவனிக்க வேண்டும். கிழக்கு மக்களை மு.கா தலைமை புறக்கணிக்கின்றது என்றும், நாம் வளர்த்த மரத்தின் பழத்தை யாரோ சுவைத்துவிட்டு, கொட்டையை மட்டும் கிழக்கை நோக்கி எறிகிறார்கள் என்றும் கடந்த பல வருடங்களாக சமான்ய மக்கள் மத்தியில் இருந்த இனம்புரியாத மனக்கிலேசத்தை தூண்டிவிடக் கூடிய சக்தி கொண்டதாக, கிழக்கின் எழுச்சி பரிணாமம் எடுக்கலாம். அதற்கு, கிழக்கின் எழுச்சியில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என்பதைத் தனியே எழுத வேண்டும். சாணக்கியம் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட சமூகத்துக்கு உதவாத காரியங்களை, பிழைதிருத்திக் கொள்வதற்கு இனியாவது முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
கட்சிக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தீர்க்கப்படுவதோடு, மக்களை மையமாகக் கொண்ட அரசியலை நோக்கி தலைமை நகர வேண்டும். இந்த நாட்டில் இனப் பிரச்சிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் அபிலாஷை என்ன என்பதை முதலில் தான் உணர்ந்து, பின்னர் உலகுக்குச் சொல்ல வேண்டும். இன்றைய நிலையில், மு.காவின் தலைமைத்துவத்தைக் கிழக்கின் எழுச்சியால் அவ்வளவு இலேசாக, குறுகிய காலகெதியில் கைப்பற்ற முடியாது. ஆனால், கிழக்கின் எழுச்சி ஹக்கீமுக்கு நிச்சயம் சவால்மிக்க களச்சூழல்களை தோற்றுவிக்கும். இதற்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் நேரடியாகக் களத்தில் இறங்கினால், அந்தச் சவால்களை சமாளிக்க முடியாத இக்கட்டான தருணமும் வரக்கூடும். எனவே, இதனைக் கவனத்திற் கொண்டு, தொட்ட குறை விட்ட குறைகளை சாணக்கியத் தலைவர் திருத்திக் கொள்ள முன்வந்தால் சந்தோசமே. எதிரிகளைக் குறைத்து மதிப்பீடு செய்வது, தோல்வியின் முதலாவது அறிகுறியாகும்.