தனது பணிக்கு கங்குலி மதிப்பளித்து இருக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் பயற்சியாளர் பதவிக்கு அண்மையில் அனில் கும்பிளே தேர்வு செய்யப்பட்டார். பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்த  நிலையில்,இந்திய அணியின் இயக்குநராக ஒரு ஆண்டுக்கும் மேலாக பதவி வகித்த ரவி சாஸ்திரிக்கும் அனில் கும்பிளேவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

இருப்பினும், ரவி சாஸ்திரியை நிராகரித்த, சச்சின் தெண்டுல்கர் , கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய குழு அனில் கும்பிளேவை தேர்வு செய்தது. முன்னதாக பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் ரவிசாஸ்திரி கலந்து கொண்ட போது, கங்குலி கலந்து கொள்ளவில்லை. எனவே ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு கங்குலிதான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், கங்குலி நேர்காணலின் போது கலந்து கொள்ளாததற்கு ரவி சாஸ்திரி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா  டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி கூறுகையில், கங்குலி தனது வேலைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். இது பற்றி அவர் மேலும் கூறும் போது, யார் மீதும் கோபம் இல்லை. நான் அதிருப்தி அடைந்தேன் அவ்வளவே. கிரிக்கெட்டில் எதுவும் ஆச்சர்யம் இல்லை. சவுரவ் கங்குலியுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை என்பதுதான் எனக்கு அதிருப்தியை தருகிறது” என்றார்