ரஹ்மான் நிஜாமி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியாகினர்.

அப்போது வங்காளதேசத்தில் வாழ்ந்துகொண்டே பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் தலைவர்கள்மீது கலிதா ஜியா தலைமையிலான தற்போதைய அரசு தேசத்துரோக வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்கில் பல முக்கிய தலைவரகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

தண்டனையை எதிர்த்து சிலர் மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி, உயிர்பிச்சை கேட்டு வருகின்றனர்.

அவ்வகையில், வங்காள தேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்த அரசு அவர்மீது போர்க்குற்ற வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைத்து வைத்திருந்தது.

தனிநாடு கோரி சுதந்திர போரில் ஈடுபட்டிருந்த மக்களில் தனது சொந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 450 பேரை கொன்று குவித்ததில் நிஜாமிக்கு முக்கிய தொடர்பு இருந்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. சுமார் நான்காண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு நிஜாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனுக்களை கடந்த ஐந்தாம் தேதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது, இதையடுத்து, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே நிஜாமிக்கு இருந்தது. 

ஜனாதிபதியிடம் உயிர்பிச்சை கேட்டு கருணை மனு அனுப்ப நிஜாமி விரும்பாததால் அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துவந்தனர். எனவே, அவர் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என நேற்று தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அவரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தலைநகர் டாக்காவில் உள்ள மத்திய சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக அவரை நேற்று மாலை சந்திக்க நிஜாமின் மனைவி, பிள்ளைகள் மற்றும் முக்கிய உறவினர்கள் என சுமார் 20 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை தூக்கிலிடப் போகும் தகவல் வெளியானதும், தலைநகர் டாக்காவில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போலீசாருடன், ராணுவத்தினரும் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு, ரோந்து சுற்றி வந்தனர்.

நிஜாமி தூக்கிலிடப்பட்டு, உயிர் பிரிந்ததாக இன்று அதிகாலை செய்திகள் வெளியானதும் 1971-ம் ஆண்டு நடைபெற்ற பிரிவினைப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று அதிகாலையில் இருந்து நாடு முழுவதும் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்காளதேசத்தில் ஆறாண்டுகளுக்கு முன்னர், போர்க்குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனிநீதிமன்றம் அமைக்கப்பட்ட பிறகு, அங்கு மரண தண்டனை விதிக்கப்பெற்றவர்களில் தூக்கிலிடப்பட்ட ஐந்தாவது முக்கிய தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி என்பது குறிப்பிடத்தக்கது.