பெங்களூர் அணியை வீழ்த்தியது ஐதராபாத் – ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, வெற்றிக்குரிய உத்வேகத்தை தொடர முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஆனால் அதேசமயம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

இந்த இரு அணிகளும் மோதும் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணிக் கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். தவானும், வார்னரும் தொடக்க வீரர்காளாக களமிறங்கினார்கள். தவான் 11 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். மற்றொரு முனையில் நின்ற வில்லியம்ஸ்சன் நிதானமாக ஆடி ரன் குவித்தார். 

சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 92(50 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வில்லியஸ்சன் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வாட்சன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதிக் கட்ட ஓவர்களில் ஹென்ரிக்ஸ்(31) அதிரடி காட்ட, ஐதராபாத் அணி 20 ஓவர் முடில் 4 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணித் தரப்பில் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. விராட் கோலியும், கே.ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.  மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட விராட் கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுலும், டி வில்லியர்சும் அதிரடியாக ஆட பெங்களூர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் 51 எடுத்திருந்த ராகுல் ஹென்ரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனை அடுத்து களமிறங்கிய வாட்சன் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். களத்தில் டி வில்லியர்ஸ் இருந்ததால் ஆட்டம் பெங்களூருக்கு சாதகமாகவே இருந்தது. இந்திய இளம் வீரரான சச்சின் பேபியும் அதிரடிக் காட்ட ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. ஆனால் டி வில்லியர்ஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்ததும் பெங்களூரின் தோல்வி உறுதியானது. 

 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.