கொல்கத்தா அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது டெல்லி டேர்டெவில்ஸ்

CRICKET-T20-IPL-IND-DELHI-KOLKATA

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் உள்ளூர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கருண் நாயர் 50 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். சாம் பில்லிங்ஸ் 34 பந்துகளில் 54 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 34 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் உத்தப்பா பொறுப்புடன் ஆடி அணியின் ரன் ரேட்டை சீராகக் கொண்டு சென்றார். ஆனால், மறுமுனையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆட்டத்தின் போக்கு மாறியது. 

குறிப்பாக கேப்டன் காம்பிர் 6 ரன்களிலும், பியூஷ் சாவ்லா 8 ரன்களிலும், யூசுப் பதான் 10 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். சற்று போராடிய சூரியகுமார் யாதவ் 21 ரன்கள் சேர்த்தார். 18-வது ஓவர் வரை போராடிய உத்தப்பா 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோரிஸ் ஓவரில் விக்கெட்டை இழந்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, கொல்கத்தா அணி 159 ரன்களில் சுருண்டது. 

இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது. 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய பிராத்வெயிட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பபட்டார்.