தேர்தல் முறை கொள்கை ஆவணம் கையளிக்கப்படும் !

mano_g_b1மலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிக்காட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட  உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.   

மத்திய மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் இந்த கொள்கை வழிக்காட்டல் ஆவணத்தை தன்னுடன், தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும்  இணைந்தே நாளை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன்  மேலும் கூறியதாவது,

அனைத்து சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் மட்ட கலந்துரையாடல் செயற்பாடுகள் நடைபெறும் அதேவேளையில், தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரத்தியேக பிரதிநிதித்துவ தேவைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நமது  பிரத்தியேக முன்னுரிமை தேவையாக தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயம் என்ற விவகாரம் இருக்கின்றது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் அனைத்தும் தங்கள் அரசியல், இன நல தேவைகளை முந்நிறுத்தி சொந்த நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளார்கள்.

அதை நான் எனது ஆட்சியில் செய்யப்போவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் 11ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அளித்த உறுதிமொழியை நாம் பெரிதும் பாராட்டி வரவேற்கின்றோம்.

புதிய தேர்தல் முறைமை திருத்த சட்டமூல விவகாரத்தில், நுவரேலியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, மாத்தளை, புத்தளம், களுத்துறை ஆகிய தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்கள் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய நமது மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்கள். இந்த பேச்சுவார்த்தைகளில் உருவான கருத்தொருமைப்பாடுகளின்  அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஆவணமே ஜனாதிபதியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

இந்த ஆவணத்தில் புதிய தேர்தல் முறைமை அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் பிரதான ஓர் அம்சமாக தொகுதி மீள் நிர்ணயம் அமைந்துள்ளதை நாம் வரவேற்றுள்ளோம். கடைசியாக 40 வருடங்களுக்கு முன்னமேயே தொகுதி மீள் நிர்ணயம் நடைபெற்றது.

அவ்வேளையில் நாட்டின் ஜனத்தொகை 70 இலட்சமாகும். இன்று நாட்டின் ஜனத்தொகை 200 இலட்சத்தை கடந்து விட்டது. இதற்கமைய தென்னிலங்கையில் தமிழர் ஜனத்தொகையும் அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் கணிசமான மலையக தமிழர்கள் குடியுரிமை, வாக்குரிமை இல்லாது இருந்த நிலைமையும் இன்று மாறியுள்ளது.

இவற்றை கணக்கில் எடுத்து நுவரெலியா மாவட்டத்தில் புதிய நான்கு தனித்தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதேவேளை நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதுபோல் இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் ஜனத்தொகை செறிவுக்கு ஏற்ப பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்படும் சாத்தியங்கள் பற்றியும் ஆராயப்படவேண்டும்.

அதுபோல் அமையவிருக்கும் தொகுதி மீள் நிர்ணய பணியின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படும் முகமாக, மீள் நிர்ணய ஆணைக்குழுவின்  இணை தவிசாளராக தேர்தல் ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழுவில் தேசிய சகவாழ்வுக்கு முரணற்ற முறையில் நமது மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும்.  

இவற்றுக்கமைய எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பில் நாம் சில உறுதிமொழிகளை எதிர்பார்க்கின்றோம்.  புதிய நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் கொள்கை வழிக்காட்டல்களை அடிப்படையாக கொண்டே மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டங்கள் புதிதாக திருத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும்.

அதனடிப்படையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லை நிர்ணயங்கள் இரத்து செய்யப்பட்டு அவை, தேசிய மீள் நிர்ணய குழுவின் கண்காணிப்பில் சுயாதீன நிபுணர்களினால் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும், ஆகிய கொள்கை வழிக்காட்டல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் உள்ளடங்குகின்றன.