ஆசிரியர்களுக்கு பெண் மாணவிகளின் தொலைபேசி இலக்கம் எதற்கு..??

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்

 

187172387_Fotor

 

மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற இந்த வட்டத்திற்குல் குரு என்று சொல்லப்படும் ஆசிரியர்களும் வந்திருப்பது ஆசிரியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், எவ்வளவு போற்றுதலுக்கும், கண்ணியத்துக்கும் உரியவர்கள் என்பதை காட்டி நிற்கிறது. மாணவர்கள் ஒரு நாளின் அரைவாசி நேரம் வரை ஆசியர்களின் பராமரிப்பிலிருப்பதால் அவர்களும் அந்த மாணவர்களுக்கு தாய்-தந்தையர்கள்தான் என்ற அந்தஸ்த்தை அடைந்து விடுகின்றார்கள்.

இத்தகைய மதிப்புக்கும் போற்றுதலுக்குமுரிய ஆசிரியர்களின் ஒரு சிலரது நெறிபிறழ் நடத்தைகள் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் இழுக்கையே ஏற்படுத்தி விடுகிறது. இன்றைக்கு எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் அந்தப் பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் ஆசிரியர் ஒருவரின் லீலை அரங்கேறியிருக்கும் அந்த அளவுக்கு சீர்கேட்டுக்கு உரியர்களாக ஒரு சில ஆசிரியர்கள் மாறியிருக்கிறார்கள்.

இவ்வாறான சீர்கேட்டு சம்பவங்கள் நமது பிரதேசத்து பாடசாலைகளிலும் அரங்கேறாமல் இல்லை.

அண்மையில் ஒரு தந்தை என்னிடத்தில் முறையிட்டார் குறித்த ஆசிரியர் ஒருவர் அவருடைய வீட்டு தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டு அவருடை மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதாக, குறுஞ் செய்திகள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன்றனவற்றை அனுப்புதாக முறையிட்டார். இது சிறியதொரு விடயம்தான் ஆனால் இதுவே பிறகு பாதக நிலைமையை ஏற்படுத்தி விடும். இந்த ஆசிரியருக்கு குறுஞ் செய்திகள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்ப அப்படி என்ன தேவையிருக்கிறது…??? மாணவியின் கல்வி நடவடிக்கை சம்பந்தமாக பேசுவதாக இருந்தால் நேரடியாக அந்த மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பை மேற் கொண்டு பேச வேண்டியதுதானே அதுதானே முறையும் கூட.

இணையம், தொலைபேசி போன்றன மலியாத ஒரு காலத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவ-மாணவிகளுக்குமிடையிலிருந்து வந்த புனிதத்துவ உறவு கெட்டுப் போனதில்லை ஆனால் இன்று அந்தப் புனித உறவு கெட்டுப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.

அன்று ஆசிரியர்கள் தோற்றத்திலும் சரி, குணத்திலும் சரி மாணவ-மாணவிகளோடு தந்தை என்ற அந்தஸ்தோடுதான் இருந்தார்கள் ஆனால் இன்று இருக்கும் ஆசியர்கள் அவ்வாறாக இருப்பதில்லை மாணவிகளை மாணவிகளாப் பார்க்காமல் ஒரு கவர்ச்சிப் பெண்ணாகவே பார்க்கிறார்கள். இன்று பல ஆசிரியர்கள் இளைஞர்களாக, மிக இளைஞர்களாக இருப்பதால் அவர்களாலும் இவ்வாறான சீர்கேடுகள் நடந்த வண்ணமிருக்கின்றன, காதல் கசமுசாக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும், உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க பேச வேண்டும் தொலைபேசி இலக்கங்களைத் தாருங்கள் என்று பெற்றுக் கொண்டு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.

சிலர் பாடம் நடாத்தி விட்டு உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் எனது இலக்கத்துக்கு அழையுங்கள் என கரும்பலகையில் அவர்களது தொலைபேசி இலக்கங்களை எழுதிவிடுகிறார்கள் அதன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியரது தொலைபேசி இலக்கம் சென்று விடுகிறது மாணவர்களும் சந்தேகம் தீர்க்கவே அழைப்பை மேற் கொள்வார்கள் ஆனால் ஒரு சில வக்கிர எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் அதனை தவறாகப் பயண்படுத்தி மாணவர்களோடு அநாகரீக தொலைபேசி பாவனை செய்கிறார்கள்.

மாணவனோடு ஆசிரியை ஓட்டம், ஆசிரியரோடு மாணவி நாட்டம், அதிபர் பாலியல் சேட்டை, கல்வியதிகாரியால் மாணவி பலாத்காரம் என்ற இவ்வாறான செய்திகள்தான் இன்று அதிகம் அதிகம் வருகின்றன அதற்குக் காரணம் ஒரு சில ஆசியர்களின் வக்கிர எண்ணம்தான். இவ்வாறான ஆசிரியர்களால் தன் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் தயங்குகிறார்கள், பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி வீட்டிலேயே இருத்தி விடுகிறார்கள்.

ஏனைய பிரதேசங்களிலும், நாடுகளிலும் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் நமது பிரதேசத்து பாடசாலைகளிலும் அவ்வப் போது நடை பெறுகிறது இதனை அப்படியே விட்டு விட்டால் பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், எதிர் காலம் என எல்லாம் கேள்விக் குறியாகவே போய் விடும். இது விடயத்தில் பாடசாலை நிர்வாகமும், பெற்றோர்களும் கரிசனை கொண்டு நடக்க வேண்டும்.

பாடசாலை ஆசியர்களின் கற்றல் கற்பித்தல், பாடசாலை மாணவிகளோடு ஆசியர்களின் தொடர்பு, ஆசிரியர்களின் ஒழுக்கம் போன்ற விடயத்தில் பாடசாலை நிர்வாகம் கண்டிப்பான சட்டங்களை முன்வைத்து ஒழுக்கக் கோவையை ஏற்படுத்த வேண்டும்.

தனது பிள்ளையின் வகுப்பாசிரியர் யார்..?? அவரது பெயர் என்ன..?? தனது பிள்ளைக்கு ஏனைய பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் யார்..?? அவர் எந்த ஊர்…?? எந்தப் பிரதேசம்..??? போன்ற விடயங்களை பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கல்வியோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மாணவிகளோடு பேச வேண்டுமாக இருந்தால் அவர்களது பெற்றோர்களை நேரடியாக பாடசாலைக்கு வரவழைத்து பேச வேண்டும் அல்லது பெற்றோர்களின் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அவர்களோடு பேச வேண்டும். மாணவியோடு பேச வேண்டும் எனும் பொழுது பெற்றோரின் அனுமதியோடு அவர்கள் வாயிலாக மாணவியோடு பேச வேண்டும் இத்தகைய விடங்களை பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும் பெற்றோர்களும் இது தொடர்பாக விளிப்பாக இருக்க வேண்டும்.

தன் பிள்ளையோடு அவளது ஆசிரியர்தானே பேசுகிறார் என்று ஏளமான விட்டு விட வேண்டாம் முழுக் கவனம் செலுத்துங்கள்.