புதிய அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரின் விளக்கம் !

நிஸ்மி, அக்கரைப்பற்று

 

வட கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று கூறுகின்ற தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற உள்ளூராட்சி சபைகளில் இருந்து பிரிந்து செல்வது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார் தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளருமான யூ.எல்.உவைஸ்.

 

10410688_1569558446589677_310610486213946880_n_Fotor

புதிய அரசியல் அமைப்பு சீர் திருத்தத்திற்கு முஸ்லிம் சமூகம் சார்பில் ஆலோசனை முன்வைப்பது சம்பந்தமாக அக்கரைப்பற்று பொதுப் பூங்காவில் பென்சீன் கழகத்தினால் நேற்று முன்தினம் பென்சீன் கழக சமூக சேவைப் பிரிவுத் தலைவர் எம்.எம்.றாஸீக் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
இக் கருத்தரங்கில் யூ.எல்.உவைஸ் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தல் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசியல் அமைப்பு திருத்தம் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு எல்லா மாவட்ட மக்களிடமிருந்தும் தனிப்பட்டவர்களிடமிருந்தும், அமைப்புக்களிடமிருந்தும், சிவில் சமூக பிரதி நிதிகளிடம் இருந்தும் ஆலோசனைகளை பெற்று வருவதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். இதன் பின் அரசியல் கட்சிகளினால் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன் வைக்கப்படும். அரசியல் அமைப்பு திருத்தம் நடைபெறுமா? இல்லையா? என்று யாருக்கும் தெரியாது. இருந்த போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான உரிமைகள், அபிலாசைகள் அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்த வேண்டிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் முஸ்லிம் சமூகம் திட்டவட்டமாக முன்வைக்க வேண்டும். அதற்கு எல்லோரும் சேர்ந்து முதலாம் தர ஆவணம் ஒன்றை தயாரிப்பது நமது சமூகக் கடமை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பில் திருப்தி காணப்படாததனால் தான் 1972.05.22ம் திகதி 01வது குடியரசு யாப்பு சோஸலிச ஜனநாயக குடியரசு ஏற்படுத்தப்பட்டது. 1972ம் ஆண்டு இந்த அரசியல் அமைப்பு இலங்கை மக்கள் வழிநடாத்த போதுமானதாக இல்லை என்று 1977.07.21ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்று 1978ம் ஆண்டு 2வது குடியரசு யாப்பு ஜனநாயக சோஸலிச குடியரசு உருவாக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி து.சு. ஜயவர்த்தன அவர்களின் தலைமையில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு 24 அத்தியாயங்களையும் 172 சரத்துக்களையும் 133 பக்கங்களையும் கொண்டது. 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு இதுவரையில் 19 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 19 திருத்தங்களில் 52 உபவிதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த யாப்பில் உள்ள விடயங்கள் இலங்கை சமூகங்களை வழி நடாத்த போதாமை இருப்பதையும் சமூகங்களின் உரிமைகளை பெற முடியாதமையினாலும் 38 ஆண்டுகளுக்குப்பின் இன்னுமொரு அரசியல் அமைப்பை அல்லது புதிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை புதிய அரசு ஏற்பாடுகள்

1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை இல்லாமல் செய்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்குதல் அல்ல. 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கு மேலும் திருத்தங்கள் கொண்டு வருதல் என்று எந்தவிடயமாக இருந்தாலும் முஸ்லிம் சமூகம் நமது உரிமைகளையும் அபிலாசைகளையும் அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதங்களை உறுதிப்படுத்த முன்மொழிவுகளை பிரேரிப்பது கட்டாய கடமையும் சமூகத்தின் தேவையுமாகும்.

இந்த அரசியல் அமைப்பு திருத்தத்தில் முக்கியமான விடயமாக இருப்பது அதிகார பரவலாக்கம் என்ற விடயமாகும். அதிகாரப்பரவலாக்கல் மாகாண சபைகள் அதிகாரங்களையும் பற்றி 13வது திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டம் 43 பக்கங்களை கொண்ட பெரிய சட்டமாகும். மாகாண சபைக்கான அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் போதாது என்று ஒரு சாரார் கூறிக் கொண்டிருக்கின்றனர். இன்னுமொரு சாரார் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். 13வது திருத்தச் சட்டத்தை 1310 ஆக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.

13வது திருத்தச்சட்டத்தில் உள்ள சில உப விதிகள் 09வது அட்டவணையில் நிரல் 01 இல் மாகாண சபை நிரல் 1 பொலிஸும் ஒழுங்கும், 18 காணி, அத்தியாயம் 17 (154 அ) மாகாண சபைகள் தாபித்தல் (03) இந்த சரத்துக்கள் ஆராயப்பட்டு திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பு திருத்தத்தில் முக்கியமான ஒன்றுதான் அதிகார பரவலாக்கல் மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்குதல் விடயமாகும். இந்த விடயத்தில் முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, அபிலாசைகள் அத்தனையும் அரசியல் அமைப்பு திருத்தத்தில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் அக்கரைப்பற்றை சேர்ந்த 03 அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் உள்ளது.

1. வட கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு தனியாக இருக்கவேண்டும். என்பது தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ALM.அதாஉல்லா அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.

2. வட கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம் மாகாணங்கள் உருவாக்குதல். முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகம் MIM முகைதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.

3. முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு மாகாண சபை உருவாக்கப்படவேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் MH. சேகு இஸ்ஸதீன் அவர்கள் முன் வைத்த கோரிக்கை.

அதிகாரப் பரவலாக்கம் சம்பந்தமாக வருகின்ற எந்தமுடிவாக இருந்தாலும் மேற்சொல்லப்பட்ட 03 கோரிக்கைகளின் அடிப்படையில் தான் அமையும் என்பதை திட்டவட்டமாக கூறமுடியும்.

வடக்கு கிழக்கில் என்ன நடந்தது என்பதை கடந்த கால வரலாற்றை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாமல் இன்றும் அச்சப்பட்டுக்கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதை கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களும் ஏனைய 07 மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களும் ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் வடக்கு முஸ்லிம்கள் மாத்திரம் அவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கிழக்கு வடக்குடன் இணைந்திருக்கவேண்டும் என்பதை அபிப்பிராயப்படுகின்றார்கள்.

ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதம், உரிமைகளை பெற்றெடுத்தல் விடயத்தில் தமிழ் மக்கள் அல்லது தமிழ் அரசியல் தலைவர்கள் இன்றுவரை முஸ்லிம்கள் சம்பந்தமாக ஆரோக்கியமான எந்த முன்மொழிவுகளையும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ முன் வைக்கவில்லை.

முஸ்லிம் சமுகத்தையும் ஒன்று சேர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ் மக்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் சிந்தித்திருந்தால் வடகிழக்கில் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற நடக்கப்போகின்ற விடயங்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கப்போகின்றார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

வட கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று கூறுகின்ற தமிழ் மக்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற உள்ளூராட்சி சபைகளில் இருந்து பிரிந்து செல்வது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள். உதாரணமாக அம்பாரை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை, தொகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அந்த உள்ளூராட்சி சபைகளில் இருந்து தமிழ்மக்கள் தனியாகப் பிரிந்து செல்வது ஏன்?

1. பொத்துவில் முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி சபையில் இருந்து கோமாரி பிரதேச சபை பிரிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

2. அக்கரைப்பற்று முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி சபையில் இருந்து திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச சபைகளை பிரித்தெடுத்தார்கள்.

3. நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபையிலிருந்து காரைதீவு பிரதேச சபையை பிரித்தெடுத்தார்கள்.

4. சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மை சபையிலிருந்து நாவிதன்வெளியை பிரதேச சபையைப் பிரித்தெடுத்தார்கள்.

5. கல்முனை முஸ்லிம் பெரும்பான்மை பிரிவில் இருந்து கல்முனை தமிழ் பிரதேச சபை வேண்டும் என்று போராட்டம் நடாத்துகின்றார்கள்.

6. தமிழ் பேசும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காரையோர கச்சேரி ஒன்றை முஸ்லிம்கள் முன்னெடுத்த போது அம்பாரை நகரில் சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் சேர்ந்து கரையோர கச்சேரி வேண்டாம் என எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

7. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குள் இருக்க முடியாது என்று திருக்கோயில் கல்வி வலயம் கேட்டு பிரித்து எடுத்தார்கள்.

8. கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி ஆணையாளராக இருந்த தமிழ் சகோதரர் ஓய்வு பெற்ற போது உள்ளூராட்சி ஆணையாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தை இரத்துச் செய்யுமாறு உள்ளூராட்சி சபையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

9. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு எல்லைப் பிரிப்பில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகள், சந்தைக்கட்டிடங்கள் பல, ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் இருக்கின்றது. அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் 33 தமிழ் வாக்காளர்கள் இருப்பதனால் 33 வாக்காளர்களும் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குள் வரவேண்டும் என்று ஆலையடிவேம்பு பிரதேச சபை வழக்குத் தொடர்ந்துள்ளது.

10. சின்ன முகத்துவார பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தமிழ்மக்களின் காணிகளை விற்கக்கூடாது என்று துண்டுப்பிரசுரம் அச்சிட்டு வெளியிடுகின்றனர்.

இந்த பின்னணியில் எப்படி வடகிழக்கில் முஸ்லிம்கள் சேர்ந்து வாழமுடியும் என்பதை விஞ்ஞான பூர்வமான தீர்வை முன்வைப்பது முக்கிய விடயமாகும்.

அரசியல் அமைப்பு திருத்தத்தில் முஸ்லிம்கள் சார்பாக முன்மொழியப்பட வேண்டிய சில விடயங்களை எல்லோருடைய சிந்தனைக்கும் முன்வைக்க விரும்புகின்றேன்.

1. தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை இன்னும் சரியான முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டு ஜனாதிபதிமுறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டும்.

2. தற்போதுள்ள தேர்தல் முறைமை சரியான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போதுள்ள விகிதாசார முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும்.

3. அதிகாரப் பரவலாக்கல் மாகாண சபைக்கான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படும் போது முதல் பணியாக செய்யவேண்டிய விடயம் இலங்கை மக்கள் இலங்கையிலுள்ள சமூகப்பிரிவுகள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்திஜீவிகளின் வழிகாட்டுதலினால் நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு நல்ல சமூகம் உருவாக்கப்படுமானால் மாத்திரம்தான், அரசியல் அமைப்பு புதிய திருத்தம் ஏற்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தற்போது இருப்பது போன்று 09 மாகாணங்களும் 09 மாகாணங்களாக இருக்கவேண்டும். அதில் 07 மாகாணங்கள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம், தமிழர்கள், மலையக மக்கள் சிறுபான்மையாகவும் கொண்டு அமையப் பெறவேண்டும். ஒரு மாகாணம் வட மாகாணம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் முஸ்லிம் சிங்கள மக்கள் சிறுபான்மையாகவும் கொண்டு அமைக்கப்பட வேண்டும். மற்றுமொரு மாகாணம் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகவும் தமிழ், சிங்கள மக்களை சிறுபான்மையாகவும் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும். 09 மாகாணத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் உரிமைகள், அபிலாசைகள் விடயத்தில் போதுமான பாதுகாப்பு உத்தரவாதம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வட கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் MH சேகு இஸ்ஸதீன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இவரோடு இன்னும் பலரினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.