மீண்டும் நாட்டில் ஆயுத மோதல் நிலைமை ஒன்று உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை : மஹிந்த !

நாம் யுத்தத்தின் பின்னர் எவ்வாறு வடக்கை கையாண்டோமோ அந்த நிலைமையில் இன்று நாடு இல்லை. இந்த செயற்பாட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலமடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,

president-mahinda-rajapaksa-newsfirst-626x380

 

விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதும் எமது இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்பதுமே இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. அரசாங்கத்தின் தேவையும் அதுவாகவே உள்ளது. 

ஆகவே சர்வதேச நாடுகளையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு உள்ளது. 

மிக சிரமத்தின் மத்தியில் இன்று நல்லாட்சி என்ற மாற்றமும் அதற்காகவே ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயத்தில் ஆச்சரியமடைய தேவையில்லை. 

ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் மட்டும் வேண்டும் என்றவர்கள் இப்போது வடக்கில் உள்ள இராணுவத்தை முழுமையாக வெளியேற்ற வென்றும் கூறுகிறனர். தனி வடக்கு கிழக்கு அலகுகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாம் யுத்தத்தின் பின்னர் எவ்வாறு வடக்கை கையாண்டோமோ அந்த நிலைமையில் இன்று நாடு இல்லை. 

இந்த செயற்பாட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலமடையும், அவர்களுக்கான மாகாண அதிகாரங்கள் பலப்படுதப்பட்டால் அவர்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்படும். 

இதையே சர்வதேச தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்தின் போதும் இந்த விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரப்பட்டுள்ளது. 

ஆகவே அதை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. 

அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாயின் மீண்டும் நாட்டில் ஆயுத மோதல் நிலைமை ஒன்று உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதேபோல் மீண்டும் நாட்டில் குழப்பகர சூழல் உருவாகி சர்வதேசத்தின் அத்துமீறிய செயற்பாடுகளினால் நாடு துண்டாடப்படும். 

அந்த இலக்கை நோக்கியே இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.