மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிக்கு திரும்பும் ரோஜர் பெடரர்!

 

images
மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வரும் சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர், ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. மூட்டு தசை குருத்தெலும்பு கிழிந்ததால் அவருக்கு சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஏபிஎன் அம்ரோ உலக டென்னிஸ் தொடர் மற்றும் துபாய் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் இருந்து விலகினார். காயம் முழுமையாக குணமடைந்ததும் அடுத்த மாதம் கலிபோர்னியாவின் இண்டியன் வெல்சில் நடைபெற உள்ள பிஎன்பி பரிபாஸ் ஓபனில் விளையாட திட்டமிட்டிருந்தார்.

ஆனால், போதிய பயிற்சி இல்லாததால் மேலும் ஒரு மாதம் தாமதமாக, அதாவது ஏப்ரல் மாதம் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். 

“டென்னிஸ் கோட்டிலும், உடற்பயிற்சி கூடத்திலும் அதிக அளவில் பயிற்சி எடுத்துள்ளேன். இருப்பினும், இந்த ஆண்டு இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால், மிகவும் அழுத்தம் கொடுத்து உடனடியாக போட்டிகளுக்கு திரும்ப விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக இண்டியன் வெல்ஸ் போட்டியில் விளையாட முடியவில்லை. அடுத்த ஆண்டு விளையாடுவேன்.

எனது குழுவினருடன் ஆலோசனை நடத்தியபின்னர், மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாட முடிவு செய்தேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விரைவில் உங்களை சந்திக்கிறேன்’’ என பெடரர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.