வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார்: நளினி

priyanka-nalini
வேலூர் சிறையில் தன்னை சந்தித்த பிரியங்கா காந்தி, மிரட்டும் தொனியில் பேசியதாகவும், எந்த ஒரு வசதியையும் செய்து தரக்கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார், ராஜிவ் கொலை வழக்கில் 25 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி…

தந்தை சங்கர நாராயணன் மறைவையடுத்து சென்னை, கோட்டூர்புரத்தில், நடைபெற்ற, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக 12 மணி நேரம் மட்டும் நளினி பரோலில் வெளியில் விடப்பட்டார். அப்போது, இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ: பரோல் கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை.  

என் தந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக பரோல் கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்தபிறகுதான், பரோல் கிடைத்தது.

மகள் செய்த தவறேது:
எனவே, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு 25 வயதில், திருமண பருவத்தில், ஒரு மகள் இருக்கிறாள். 

எந்தத் தவறும் செய்யாத என் மகள், பெற்றோரைப் பிரிந்து இத்தனை ஆண்டுகளாக ஏன் இருக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளில் சிறைக்குள் நிறையத் துன்பங்களை அனுபவித்து விட்டோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது.

முதல்வர் மீது நம்பிக்கை:
எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். 

முதலமைச்சரை நாங்கள் நம்பி இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நளினி தெரிவித்துள்ளார்.

மிரட்டும் தொனி:
வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி, சில வருடங்கள் முன்பு, நளினியை தனிமையில் சந்தித்து பேசினார். 

அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நளினி, அவர் பேசிய முழு விவரத்தையும் இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். 

அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்போது, எனக்கு எந்த வசதியும் செய்து தரக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். இவ்வாறு நளினி கூறியுள்ளார்.