பதான்கோட் தாக்குதலை விசாரிக்க பாகிஸ்தான் அமைத்துள்ள கூட்டு விசாரணைக் குழு !

5b70e7fe-9cb3-4ca8-81be-be71fc43f5ea_S_secvpf
பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐந்து நபர்கள் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது.பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தை தகர்க்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி அங்கு புகுந்த 6 ஜெய்ஷ்–இ–முகமது தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த மோதலில் 7 வீரர்களும் உயிரிழந்தனர்.
 
பாகிஸ்தான் எல்லையையொட்டி பஞ்சாபில் 24 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. மேலும், இதுகுறித்த ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியிருந்தது.

அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. மேலும், பதான்கோட் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முதன்முறையாக குஜ்ரன்வாலா போலீஸ் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐந்து நபர்கள் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவை பாகிஸ்தான் இன்று அமைத்துள்ளது.

பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு படையின் கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல், லாகூர் உளவுத்துறை துணை டி.ஜி.பி., பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ., அமைப்பை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ராணுவ உளவுத்துறை லெப்டினன்ட் கர்னல் மற்றும் குஜ்ரன்வாலா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு படை அதிகாரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முன்னரும் பதான்கோட் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்கள் தொடர்பாக விசாரிக்க ஆறுபேர் கொண்ட சிறப்புப் படையை பாகிஸ்தான் அரசு அமைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.