நாம் நம்புகிறோம் சாரணியத்தின் மூலம் இலங்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்கலாம் : ஜனாதிபதி !

 இலங்கையில் தேசிய நல்லிணக்கம் எப்படியானதாக உருவாகவேண்டும், இருக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை படம் பிடித்துக் காட்டுவதைப்போல் 9வது தேசிய ஜம்போறி நிகழ்வில் சாரணியர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் ஒண்றிணைந்து இருக்கும் காட்சி அமைந்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

 

9வது தேசிய ஜம்போறி நிகழ்வை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

janathipathi_jaffna_saranar_006_Fotor

 

கடந்த 48 வருடங்களுக்கு முன்னர் பொலனறுவையில் உள்ள பாடசாலை ஒன்றில் நானும் சாரணியராக இருந்திருந்தேன். அதனாலோ என்னவோ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.

அந்தவகையில் எனக்கு முன்னால் இருக்கின்ற சாரணியர்களுக்குள் எதிர்கால ஜனாதிபதியும் இருக்கலாம். மேலும், இங்கே இருந்து கொண்டிருக்கும் சாரணியர்களுக்கிடையில் கோபம் இல்லை, குரோதம் இல்லை. முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவிகளை செய்யவேண்டும் என்ற உணர்வு மட்டும் இருக்கின்றது.

 

சாரணியம் அதனையே போதிக்கின்றது. இந்து மதத்திலும், பௌத்த மதத்திலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ற போதனைகள் உள்ளது. அதே போதனைகள் சாரணியத்திலும் உள்ள நிலையில் சாரணியம் இன்றளவும் தூய்மையானதாக இருக்கின்றது.அதன் மீது எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுவது கிடையாது. நாம் நம்புகிறோம் சாரணியத்தின் மூலம் இலங்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்கலாம் என. குறிப்பாக இங்கே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.

janathipathi_jaffna_saranar_010_Fotor

 

இவ்வாறான ஒரு நல்லிணக்கத்தைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம், எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையிலேயே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க சாரணியர்களால் மிகப்பெயரிய பங்களிப்பை வழங்க முடியும். என நாங்கள் நம்புகிறோம்.மேலும் சாரணியத்தை வளர்ப்பதற்கு இலங்கையில் அரசாங்கத்தின் சார்பில் எடுக்க முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிச்சயமாக எடுப்போம். என ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

 

இந்நிகழ்வின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வீ விக்கினேஸ்வரனும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.