ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் : 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர் !

Freedom-251-ad_Fotor
 
மோஹித் கோயல். கடந்தவாரம் வரை இந்தப் பெயர் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு பரிச்சயம்  இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்று ஒரேநேரத்தில் ஆறுலட்சம் பேர் இணையதளத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நுழையவைத்து உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தவராகி விட்டார் மளிகைக் கடைக்காரரின் மகனான மோஹித் கோயல். 
 
அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு புதியரக போனை  தயாரித்துள்ள ‘ரிங்கிங் பெல்’ என்ற இந்திய நிறுவனத்துக்கு சொந்தக்காரராக இன்று திகழும் மோஹித் கோயல் ‘ப்ரீடம் 251’  என்ற பெயரில் 251 ரூபாய் விலையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளார். 
 
ப்ரீடம் 251 நேற்று முன்தினம் மாலை டெல்லியில் வெளியிடப்பட்டது. ப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு காலை 6 மணி முதல் http://freedom251.com/ என்ற இணையதளத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த போனை வாங்க விரும்பியவர்கள் அலாரம் வைத்து காலை 6 மணிக்கு முன் எழுந்து freedom251.com சென்று பார்த்தால், 6  மணிக்கு முன்பாக அந்த இணையதளம் முடங்கிவிட்டது. 
 
நான்கு அங்குலத் திரை, 1.3GHz Quad-core பிராஸசர், 1 ஜிபி ரேம், 8 ஜி.பி. உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம்  செய்துக்கொள்ள முடியும்), 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம்  மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது. ஒரு ஆண்டு வாரண்டியுடன் விற்பனை செய்யப்படும் ப்ரீடம் 251 ஸ்மார்ட்  போன்களுக்கு இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்படவுள்ளன. 
 
இந்த வியத்தகு சாதனையை படைத்துள்ள மோஹித் கோயல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தை  சேர்ந்தவராவர். இங்குள்ள காரிபுக்தா கிராமத்தில் பிறந்த இவரது தந்தை ராஜேஷ் கோயல். விவசாயியான இவர் மளிகைக்  கடையும் நடத்தியபடி, மகனை நல்லபடியாக படிக்க வைத்தார். 
 
பள்ளி இறுதிக்கல்வியை நிறைவு செய்த மோஹித், அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.)  பயின்று பட்டதாரியானார். சொந்தமாக செல்போன் தயாரிக்கும் கம்பெனி தொடங்கப் போவதாக தந்தை ராஜேஷ் கோயலிடம்  மோஹித் கூற, அவரது ஆசையை தட்டிக்கழிக்க விரும்பாத தந்தையும் வெளியே சில இடங்களில் கடன்வாங்கி ஒரு பெரிய தொகையை மோஹித்திடம் அளித்து ஆசீர்வதித்தார். 
 
இந்தத் தொகையை வைத்து தொடங்கிய ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம்தான் ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் என்ற சாதனை  வரலாற்றை சத்தமில்லாமல் பதிவு செய்துள்ளது. 
 
டெல்லியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற ப்ரீடம் 251 செல்போனின் அறிமுக விழாவில் பா.ஜ.க., மூத்த தலைவர் முரளி  மனோகர் ஜோஷி உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு மோஹித்தின் பெருமுயற்சியை வெகுவாக பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர். இவ்விழாவில் மோஹித்தின் தந்தையும் கலந்துகொண்டு ‘மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்’ என்ற குறளின் பொருளை அனுபவப்பூர்மாக உணர்ந்து புல்லரித்துப் போனார்.
 
டெல்லி அருகேயுள்ள நோய்டா பகுதியைச் சேர்ந்த தார்னா என்ற பெண்ணை சமீபத்தில் மோஹித் திருமணம் செய்து கொண்டார். ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தார்னா பொறுப்பேற்றுள்ளார். 
 
இந்நிலையில், இந்த மலிவுவிலை ஸ்மார்ட் போனைப் பற்றிய செய்திகள் வெளியானதும், வருமானத்துறை அதிகாரிகளும்,  ரகசிய போலீசாரும் தொடர்ந்து மோஹித் கோயலின் அலுவலகத்தை சோதனை என்ற பெயரில் மொய்க்கத் தொடங்கி  விட்டனர். 
 
இதுதொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த மோஹித் தனது மனவருத்தத்தை பதிவு செய்துள்ளார். 
 
அந்த பேட்டியின்போது மோஹித் கூறியதாவது:- 
 
6b1eba76-cfa9-4fd0-ad07-c2967f8a5145_S_secvpf
 
மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யும் நோக்கத்தை தவிர நான் வேறென்ன தவறு  செய்தேன்? என்மீது எந்த காவல் நிலையத்திலாவது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது, என்மீதோ எனது  நிறுவனத்தின்மீதோ வருமான வரி ஏய்ப்பு வழக்கு ஏதாவது நிலுவையில் உள்ளதா? சட்டப்பூர்வமான தொழில் செய்ய உரிய  முறையில் திட்டமிட்டு ஒரு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 
 
ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு தொடங்கிய 18-ம் தேதியில் இருந்து இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமானவர்கள் எங்களிடம் முன்பதிவு செய்துள்ளனர். இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில்  சில்லரை விற்பனை மூலம் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்கள்  அனுப்பி வைக்கப்படும். 
 
இதற்காக, பெறப்படும் பணம் அத்தனையும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்களை  டெலிவரி செய்வதற்கு முன்பாக அந்த பணத்தை நாங்கள் தொடக்கூட மாட்டோம். இந்த மாதிரியான செல்போன்களின் அடக்கவிலை சுமார் 1500 ரூபாய்வரை ஆகிறது. நாங்கள் தைவான் நாட்டில் இருந்து நேரடியாக உதிரிபாகங்களை கொள்முதல் செய்து குர்கானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அவற்றை வைத்து செல்போனை  தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். 
 
மேலும், ஆன்லைன் மூலம் நேரடி மார்க்கெட்டிங்கில் இறங்குவதால் இதுபோன்ற வர்த்தகங்களில் உள்ள முகவர் கமிஷன், விளம்பர செலவு, சரக்கு போக்குவரத்து செலவு போன்றவை கணிசமாக குறையும். இதர நிறுவனங்களின் ஆப்ஸை எங்களது  ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதால் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் கமிஷனையும் பொதுமக்களுக்கே  வழங்கும் வகையில் முடிவுசெய்துதான் 251 ரூபாய்க்கு இவற்றை விற்பதாக அறிவித்தோம். 
 
இந்த விலைக்கே விற்றாலும் எங்களுக்கு ஒரு போனுக்கு 31 ரூபாய்வரை லாபம் கிடைக்கும். 
 
இவ்வாறு அவர் கூறினார். 
 
முயற்சி உடையார் – இகழ்ச்சி அடையார் என்பதுடன் புகழ்ச்சியும் அடைவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக ‘மேட் இன் இந்தியா’ என்ற அடையாள முத்திரையுடன் உலக நாடுகளுக்கு சவால்விடும் வகையில் விலைமலிவான பல புதிய தயாரிப்புகளை  உருவாக்க பல்லாயிரம் மோஹித்கள் உருவாக வேண்டும்! அதன்மூலம் அனைத்து துறைகளிலும் நமது நாடு வல்லரசாகவும்,  நல்லரசாகவும் திகழ வேண்டும்!