1972ம் ஆண்டைய குடியரசு யாப்பினை தயாரிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை ஏன் தேவைப்பட்டது?

ஓட்டமாவாடி அஹமட் இர்ஸாட்

 

அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் – 4.வை.எல்.எஸ்.ஹமீட்
வரலாற்று பின்னணி-  சோல்பரி அரசியல் யாப்பு (Soulbury Constitution)

—————————————————-

 

new

1946ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி சோல்பரி யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யாப்பின் பிரகாரம் சட்டவாக்க சபை அதாவது பாராளுமன்றம் மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும்

01- ஆளுனர் நாயகம் (Governor General) 

02- மேல் சபை (Senate) (30 அங்கத்தவர்கள் – இதில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினால் தெரிவு செய்யப் படுபவர், 15 ஆளுனர் நாயகத்தினால் நியமிக்கப் படுபவர்)

03- பிரதி நிதிகள் சபை (House Of Representatives) ( அங்கத்தவர்கள் 95, இதில் 6 பேர் ஆளுனர் நாயகத்தினால் நியமிக்கப் படுபவர்கள்)

இது பிரித்தானியாவின் மாதிரியைத் தழுவியது 

பிரித்தானியாவில் பாராளுமன்றம் என்பது

*அரசர் அல்லது அரசி (King or Queen)

* பிரபுக்கள் சபை (House Of Lords)

*பிரதி நிதிகள் சபை ( House of Commons)ஆகியவற்றைக் கொண்டது.

இந்த யாப்பின் சரத்து 29(2) சிறுபான்மைகள் தொடர்பான சில விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டிருந்தது.

02

 

அதனை தொடர்ந்து 1947ம் ஆண்டு “Ceylon Independence Order in Council 1947” மற்றும் “Ceylon Independence Act 1947 “என்பன பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பிரகடனத்தின் பிரகாரம் 04.02.1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.

இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இலங்கை சார்பில் பிரித்தானியாவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் நீக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையின் வேண்டுகோளின் பெயரிலும் சம்மதத்தின் பெயரிலும் (at the request and with the consent of Ceylon) சட்டம் இயற்ற முடியும்.

இலங்கை பாராளுமன்றத்துக்கு சட்டவாக்க அதிகாரம் இருந்தாலும் அரசியல் யாப்பை திருத்துவதற்கு 2/3 பெரும்பான்மை தேவை, மற்றும்  சிறுபான்மைகளுக்கு பாதுகாப்பான சரத்து 29(2) ஒரு போதும் மாற்றவே முடியாது, ஆகிய இரண்டு பிரதான அம்சங்கள் சோல்பரி யாப்பில் உள்ளடக்கப் பட்டிருந்ததன.

2/3 பங்கு பெரும்பான்மை என்பது (Procedure) விதிமுறையுடன் சம்பந்தப்பட்டதே தவிர அரசியல் அமைப்புசட்டத்தை மாற்றுகின்ற பாராளுமன்றத்தின் தத்துவத்திற்கு சவாலானதல்ல. ஆனால் சரத்து 29/2 இல் பாராளுமன்றம் கைவக்க முடியாது என்பது பாராளுமன்ற சட்டவாக்க தத்துவத்தினை கட்டுப்படுத்துவதாக கருதப்பட்டது.
சரத்து 29/2 தொடர்பாக இலஞ்ச ஆணையாளர் எதிர் ரணசிங்க ( The Bribery Commisioner V Ranasinghhe -66 NLR 73) என்ற வழக்கில் பிரிவி கவுன்சில் ( Privy Council) இலின் தீர்ப்பு பிரதானமாகும். இதில் Lord Pearce stated, section 29(2) sets out, “entrenched religious and racial matters, which shall not be the subject of legislation “.  அதாவது சரத்து 29(2) சமய மற்றும் இன சம்பந்தமான விடயங்களை குறித்தானதாகும். இதில் எதுவிதமாற்றமும் பாராளுமன்றத்தால் செய்ய முடியாது. ( free translation)

குடியரசு யாப்புக்கான கோசம்..
குறிப்பாக 1956ம் ஆண்டு பொதுத் தேர்தலை தொடர்ந்து அப்போதைய யாப்புக்கு எதிரான விமர்சனம் அதிகரித்ததோடு புதிய குடியரசு யாப்பு ஒன்றின் தேவை தொடர்பாகவும் கருத்துக்கள் எழ ஆரம்பித்தன.

1956ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் SWRD.பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கை குடியரசாக விரும்புவதை பொது நலவாய நாடுகளுக்கு அறிவித்தார். 1957ம் ஆண்டுசித்திரை மாதம் 26ம் திகதி மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு (House Of Representavives) பிரேணை சமர்ப்பித்து மக்கள் பிரதி நித்தித்துவ சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களை கொண்டு ஒரு கூட்டுதெரிவுக் குழுவை நியமித்தார்.இலங்கையை ஒரு குடியரசாக ஆக்குவதற்காகவும் அதற்கு ஏற்ற விதத்தில் இலங்கையின் அன்றைய யாப்பான Ceylon ( Constitution) Order in Council ( சோல்பரி யாப்பு) திருத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளை முன் வைப்பதற்காக. 

(இங்கு கவணிக்கப்பட வேண்டியது)

04

 புதிய யாப்பினூடாக குடியரசு பிரகடனப்படுத்தப்படுவது இங்கு சிந்திக்கப்படவில்லை,  மாறாக பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட சோல்பரி  யாப்பை திருத்துவதன் மூலம் குடியரசு பிரகடனப்படுத்தப்படுவது பற்றியே சிந்திக்கப்பட்டது என்பதாகும்). அதே நேரம் அன்று சகல அரசியல் கட்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை ஒரு குடியரசு ஆக வேண்டும் என்பதிலும் கருத்தொற்றுமை இருந்தது.

1959ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி பண்டாரநாயகாகொல்லப்பட்டார். அதனை தொடர்ந்துDr.W.தயாநாயக்காவை ஆளுனர் நாயகம் சேர் ஒலிவர்குணதிலக்க பிரதமராக நியமித்தார். 

அதனை தொடர்ந்து 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி மீண்டும் பொதுத்தேர்தல் நடை பெற்றது. இதில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஐக்கிய தேசியக் கட்சி அதிகூடிய ஆசனமாக 50 ஆசனங்களை வென்றது. டட்லி சேனநாயக்க பிரதமராகநியமிக்கப்பட்டார்.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி டட்லி சேனநாயக்காவின் அரசாங்கம் சிம்மாசன உரைக்கு நன்றிசெலுத்தும் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் கவிழ்க்கப்பட்டது . அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிறீலங்காசுதந்திரக் கட்சி வெற்றி பெற்று சிறீமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார். அத்தேர்தலில் சிறீலங்காசுதந்திரக் கட்சி 75 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி30 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
புதிய அரசு பதவியேற்றதனைத்  தொடர்ந்து மீண்டும் நாட்டை குடியரசாக மாற்றுவது தொடர்பாக கருத்துக்கள் மேலெழத் தொடங்கின. ஆனாலும் பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட யாப்பினை திருத்துவதன் மூலம் குடியரசுபிரகடனப்படுத்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இங்கு இருக்கின்ற யாப்பினை திருத்துவதில் இரண்டு பிரதான பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

 

5

 

முதலாவது அப்போதைய யாப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தினால் வரையப்பட்டு வழங்கப்பட்டது.எனவே அந்த யாப்பிற்கான அதிகாரம் பிரித்தானியாவின் முடியாட்சியிலிருந்து பெறப்பட்டது. அந்தநிலையில் அந்த யாப்பினை திருத்துவதன் மூலம் இலங்கை முடியாட்சியின்கீழ் உள்ள நாடு என்ற தத்துவத்தினை இல்லாமல் செய்ய முடியுமா? ஏனெனில் முடியாட்சி தந்த யாப்பினை அந்த யாப்பில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு திருத்தும்போது தொடர்ந்தும் அந்த முடியாட்சி தத்துவத்தினை ஏற்பதாகத்தானே பொருள் கொள்ள வேண்டும். அந்தநிலையில் நாடு எவ்வாறு குடியரசாக முடியும்?

இரண்டாவதாக சிறுபான்மைகளுக்கு பாதுகாப்பான சரத்து29(2) ஐ மாற்றவே முடியாது, ( unalterable under the constitution), என்று பிரிவி கவுன்சில் தீர்ப்பு சொல்கின்றது. எனவே அதனை மாற்றவே முடியாது என்றால் பிரித்தானியா தந்த யாப்பிற்கு தொடர்ந்தும் கட்டுப்படுவது என்று பொருளாகிவிடும். எனவே அவ்வாறு கட்டுப்படுவது என்பது முடியாட்சிக்கு கட்டுப்படுவதாகும். எனவே முடியாட்சிக்கு கட்டுப்பட்டுக் கொண்டு எவ்வாறு குடியரசாகமுடியும்?

எனவே மேற்சொன்ன இரண்டு காரணங்களின் அடிப்படையிலும்  இருக்கின்ற யாப்பினை திருத்துவதன் மூலம் குடியரசாக முடியாது. ஆகவே இருக்கின்ற யாப்பினை ஒருபுறம் வைத்துவிட்டு அதனுடன் எந்த விதத்திலும் தொடர்புபடாமல் புதிய ஒரு யாப்பினை வரைய வேண்டும். அதனை எவ்வாறு செய்யலாம்? இந்த இடத்தில்தான்அரசியல் நிர்ணய சபை அமைக்கின்ற ஆலோசனைமுன்வைக்கபடுகின்றது.

அரசியல் நிர்ணய சபை ( Constituent  Assembly)  என்றால்என்னஅது ஏன் தேவை?

சில நாடுகளில் அரசியல் நிர்ணய சபை அமைத்து அரசியல் யாப்பு வரையப்பட்டிருக்கின்றது. ஒரு இறைமையுடய நாட்டு மக்கள் தங்களுக்காக தாங்கள் எந்தவித வெளித்தலையீடுகளும் இல்லாமல் உருவாக்குகின்ற யாப்பை ( Autochthonous Constitution)  என்று அழைக்கப்படும். இவ்வகையான யாப்பு மூன்றுஅடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கும்.

 

01) Home grown or sprung from the soil- சொந்தநாட்டில் உருவானது. 

02.Break in Legal Continuity – சட்டத் தொடர்பில் முறிவு

03. Self Sufficiency – தன்னிறைவு

இதில் இரண்டாவதாக” Break in Legal Continuity” சட்டத்தொடர்பில் முறிவு என்பதை அடைவதற்காகவே அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படுகின்றது.

இருக்கின்ற யாப்பின் விதி முறைகளுக்கு அமைவாக புதிய யாப்பை வரைவதால் அங்கு சட்டத் தொடர்பில்  முறிவு ஏற்படாது. (Break in legal continuity cannot be achieved). எனவே இருக்கின்ற யாப்பினை புறம்தள்ளி அந்த யாப்பிற்கு வெளியே புதிய யாப்பினை வரைவதன் மூலம் முன்னைய யாப்பிற்கும் புதிய யாப்பிற்கும் இடையில் தொடர்பில்லாமல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது சட்டத்தொடர்பில் (Break in Legal Continuity) முறிவு ஏற்படும்.

இதற்கு ஒரு மாற்று உபாயம் தேவை. அந்த உபாயம்தான் அரசியல் நிர்ணய சபை ஆகும். தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் செல்லும் பொழுது இருக்கின்ற அரசியல் யாப்பிற்கு கட்டுப்பட்டுத்தான் அப்பாராளுமன்றத்திற்குள் இயங்க முடியும். எனவே இருக்கின்ற யாப்பின் அடிப்படையில் இயங்கும் பாராளுமன்றத்திற்குள் இருந்து கொண்டு அந்த யாப்பை புறந்தள்ளி அந்த யாப்பிற்கு முரணாக புதிய யாப்பை வரைய முடியாது. எனவே சட்டத் தொடர்பில் முறிவை ஏற்படுத்துவதற்காக  அரசியல் நிர்ணய சபை தேவைப்படுகின்றது.

அதே நேரம் இந்த அரசியல் நிர்ணய சபையினை ஏன் சட்டவிரோதமானது மற்றும் புரட்சிகரமானது என அழைக்கப்படுகின்றது என்றால் இருக்கின்ற யாப்பையும் பாராளுமன்றத்தையும் புறம் தள்ளி அதன் பணியை ‘தான்’ செய்வதனாலாகும். இந்நிலையில் 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டு 1965ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

பிரதமர் டட்லி சேனநாயக்க அவர்கள் முன்னாள் பிரதமர்SWRD பண்டார நாயக்க அவர்கள் செய்த அதே பாணியில் கூட்டுத் தெரிவுக் குழுவினை நிறுவினார். இத்தெரிவுக்குழுவின் நோக்கமும் இருக்கின்ற யாப்பை திருத்துவதன் மூலம் குடியரசாவதே தவிர புதிய யாப்பை வரைவதல்ல. ஆனால் எதிர் கட்சிகள் ( ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா உட்பட ) அத்தெரிவுக்குழுவில் பங்குபற்ற மறுத்து விட்டன. காரணம் அரசியல் நிர்ணய சபையினூடாக புதிய யாப்பு வேண்டும்; என்பது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தது.எதிர்க்கட்சிகள் மீண்டும் பிரிவு கவுன்சிலின் சிறுபான்மைகள் தொடர்பான சரத்து 29(2) தொடர்பான தீர்ப்பினை புதிய யாப்பு தேவைக்கான  தமது  பிரதான நியாயமாக காட்டியது.

அரசியல் நிர்ணய சபையின் தத்துவம்
அரசியல் நிர்ணய சபையினை ஆதரிக்கின்றவர்கள் அதற்கான அதிகாரம் மக்களிடமிருந்து நேரடியாக கிடைக்கின்றது என்று வாதிடுகின்றார்கள். ஏனெனில் பொதுத்தேர்தலில் அரசியல் நிர்ணய சபையினை அமைக்க உத்தேசித்துள்ள கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதற்கான ஆணையை  மக்களிடம் கோருகின்றது. அக்கட்சி அந்நேரத்தில் வெற்றி பெற்றால் அரசியல் நிர்ணய சபைக்கு மக்கள் ஆணை தந்திருப்பதாகவும் அம்மக்களின் அதிகாரத்தினை கொண்டு புதிய யாப்பினை வரைவதாகவும் அவ்வாறு வரைகின்ற யாப்பு மக்களுக்காக மக்களால்தயாரிக்கப்பட்ட யாப்பு எனவும் வியாக்கியானம்கூறுகின்றார்கள்.

ஐந்தாம் பாகம் தொடரும்……