எந்த உடன்பாடுமில்லை…. – தினேஷ் குணவர்தன

dineshதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.

 

ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த ராஜபக்ஷவே எமது ஆயுதமாகும். அவரையே பிரதமர் வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பில் தீர்மானம் உள்ளதா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில்

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி விரும்பினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை அமைப்பதே எமது நோக்கமாகும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மற்றும் ஏனைய எமது உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

அதே போல மக்களின் ஆதரவு இல்லாத ஒரு பிரதமராகவே இன்று ரணில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த நிலைமை மாற வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலில் ரணிலுக்கு போட்டியாக எமது தரப்பில் மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்க வேண்டும். என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான நடவடிக்கைகளையே இப்போது கட்சி சார்பில் நாம் முன்னெடுத்து வருகின்றோம். ரணில் விக்கிரம சிங்கவை வீழ்த்தும் ஆயுதம் எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே அவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்கி பிரதமராக மாற்றுவோம்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மீண்டும் அனைத்து கட்சிகளுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். கடந்த காலங்களில் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பலப்படுத்தி எவ்வாறு ஆட்சி செய்தோமோ அதே போல் எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.