ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட இஸ்ரேல் முன்னாள் பிரதமர் சிறையில்…!

Unknown
இஸ்ரேல் நாட்டில் 2006-2009 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் எகுட் ஒல்மர்ட் (வயது 70). இவர் 1988-1992, 2003-2006 காலகட்டத்தில் காபினட் மந்திரியாகவும் இருந்துள்ளார். 1993-2003 இடையே ஜெருசலேம் நகர மேயர் பதவியும் வகித்து உள்ளார்.
 
ஜெருசலேம் மேயர் பதவி வகித்த காலத்தில், இவர் ரியல் எஸ்டேட் விவகாரம் ஒன்றில் லஞ்சம் வாங்கி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அந்த நாட்டின் கோர்ட்டில் எகுட் ஒல்மர்ட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு செய்தார். இந்த மேல்-முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரது தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று எகுட் ஒல்மர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
தன்மீதான வழக்குகளை திசைதிருப்ப முயன்ற குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதால் ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையுடன் மேலும் ஒருமாத சிறை தண்டனையும் சேர்த்து மொத்தம் 19 மாதங்களை ரம்லே நகரில் உள்ள மாசியாஹு சிறையில் அவர் கழிக்க வேண்டும்.
 
இஸ்ரேல் நாட்டில் முன்னாள் பிரதமர் ஒருவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறைக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.