பசிலின் அரசியல் மீள்பிரவேசம் ஆளுங்கட்சிக்குள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !

Basil-Rajapaksa_Fotor
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அரசியல் மீள்பிரவேசம் ஆளுங்கட்சிக்குள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஆளுங்கட்சியின் மிகச்சிறந்த திட்டமிடல் கொண்ட அமைச்சராக பசில் ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார். 

பசில் ராஜபக்ஷவின் சிறப்பான திட்டமிடல்கள் காரணமாகவே 2005 தொடக்கம் 2013ம் ஆண்டு வரையான அனைத்து தேர்தல்களிலும் மஹிந்த அரசாங்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது. 

அதன் பின்னர் நாமல் ராஜபக்ஷவின் தலையீடுகள் மற்றும் கோத்தபாயவின் அழுத்தங்கள் காரணமாக பசில் ராஜபக்ஷ தேர்தல் ஏற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டார். 

இதன் காரணமாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆரம்பித்த தோல்வி மஹிந்த அரசாங்கத்தின் தோல்வியாக மாறிப் போனது. 

அத்துடன் பசில் ராஜபக்ஷ அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சிறுபான்மை அமைச்சர்களுடன் மிகவும் நட்புறவைக் கொண்டிருந்தார். 

அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டாது நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தார். 

இதன் காரணமாக சிறுபான்மை அரசியல் கட்சிகள் மத்தியிலும் இன்றுவரை பசில் ராஜபக்ஷவுக்கு ஒரு தனி மரியாதை காணப்படுகின்றது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பசில் ராஜபக்ஷ முற்றாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்தார். 

இதன் காரணமாக மஹிந்த அணியினருக்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கான திட்டமிடல்கள் மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிரான வியூகங்களில் பாரிய குறைபாடு நிலவியது. 

இந்நிலையில் தற்போது புதிய அரசியல் கட்சி ஊடாக பசில் ராஜபக்ஷ மீண்டும் அரசியல் களத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்.

ஏற்கெனவே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான மைத்திரி எதிர்ப்பு அலையும், மிகப்பரவலான மஹிந்த ஆதரவு அலையும் வீசுகின்றது. 

யாருடைய வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டமிடல்களும் இன்றி மஹிந்தவின் பின்னால் அணிதிரளும் ஆதரவாளர்களை ஒழுங்கான முறையில் ஒருங்கமைத்து அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் மைத்திரி கட்சியின் தலைமைப் பதவியை இழக்க நேரிடும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். 

அதிலும் மைத்திரிக்கு எதிரான அணியில் பசில் போன்ற திறமைமிகுந்த தந்திரோபாயமும், சாதுரியமான திட்டமிடல்களும் கொண்ட ஒருவர் பொதுமக்களை அரசாங்கத்துக்கு எதிராக ஒருங்கிணைக்கும் பட்சத்தில் சேதம் பாரியளவாகவே இருக்கும். 

இதன் காரணமாக தற்போது அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மத்தியில் பசிலின் மீள் அரசியல் செயற்பாடுகள் ஒரு அதிர்வலையை தோற்றுவித்துள்ளதாக ஊடக செய்தியொன்று தெரிவிக்கின்றது.