சுயாதீனமாக பாராளுமன்றில் செயற்பட சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது : பொதுச் செயலாளர் !

Duminda_Disa

 

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கி விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலக வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர்  துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் தனித்து இயங்க வேண்டுமென எந்தவொரு சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விரும்பினாலும் அவர்கள் முதலில் கட்சியை விட்டு வெளியேற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டு பாராளுமன்றம் தெரிவான எவரும், சுயாதீனமாக பாராளுமன்றில் செயற்பட சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விரும்பாத கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு கட்சி அனுமதியளித்த போதிலும், தனியான கட்சியொன்றை அமைக்கவோ சுயாதீனமாக இயங்கவோ அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர் என்ற ரீதியில் உள்ளக ஜனநாயகத்தை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் எவரேனும் பிழையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.