ஆத்திரத்துடன் வெளியேறிய ஹரீஸ், சபாநாயகரிடம் முறைப்பாடு !

 ஹாசிப் யாஸீன்

 

கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலய இடமாற்ற விவகாரம் பிரதி அமைச்சர் ஹரீஸூக்கும் பணியக செயற்பாட்டுப் பணிப்பாளர் உபுல் தேசப்பிரியவுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக செயற்பாட்டுப் பணிப்பாளருக்கு எதிராக பிரதி அமைச்சர் ஹரீஸ் சபாநாயகரிடம் முறைபாடு செய்;துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதானது,

 

harees

கடந்த 20 வருடங்களாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலயத்தை அம்பாறைக்கு மாற்றுவதற்கு இனவாத போக்குடை யவர்களினால் கடந்த ஒரு மாத காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இவ்விடயம் குறித்து பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட மு.கா பிரதிநிதிகளால், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து நேற்று பாராளுமன்றத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அதுகொரலவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து மேற்படி விடயம் குறித்து பேசியதையடுத்து கல்முனைக் காரியாலயத்தினை இடமாற்றம் செய்வதில்லை என அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

மேலும் இவ்விடயம் குறித்து இன்று காலையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் தலதா அதுகொரலவுடனும், பணியகத்தின் தவிசாளருடனும் இக்காரியாலயத்தின் இடமாற்றும் விடயமாக பேசியுள்ள நிலையில், பணியக செயற்பாட்டு பணிப்பாளரின் இனவாத போக்கினால் இன்று (10) புதன்கிழமை திடீரென கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலயத்திற்கு வாகனத்தினை அனுப்பி தளபாடங்கள், கணனிகளை அம்பாறைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றிய நிலையில், அதனை பொதுமக்கள் தடுத்தி நிறுத்தியதுடன் காரியாலயத்திற்கு பூட்டுப் போட்டு பூட்டியுள்ள சம்பவம் இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரதி அமைச்சர் ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து,

பிரதி அமைச்சர் உடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சுக்கு சென்று பணியகத்தின் தவிசாளரை சந்தித்து மேற்படி வியடம் குறித்து விரிவாக தெளிவுபடுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர், கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தினை இடமாற்றும் நடவடிக்கையினை நிறுத்துமாறு அமைச்சர் தலதா அத்கொரல என்னிடம் பணித்துள்ளார் என தெரிவித்தார். இருந்த போதிலும் பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் இடமாற்றும் நடவடிக்கையில் கடும் போக்கில் செயற்படுவதாக தெரிவித்த தவிசாளர், அவருடன் பேசுங்கள் என பிரதி அமைச்சரை கேட்டுக்கொண்டு அவரை அழைத்துள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் உபுல் தேசப்பிரியவிடம் கல்முனைக் காரியாலயத்தினை இடமாற்றம் செய்;யும் நடவடிக்கையினை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இக்காரியாலயத்தின் மூலம் மட்டக்களப்பு ஓட்டமாவடி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் நன்மையடைந்து வருவதுடன் இலங்கையில் கூடுதல் வருமானம் உழைக்கும் காரியாலங்களில் இதுவும் ஒன்றாகும். இதனை இடமாற்ற வேண்டாம் என மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத செயற்பாட்டுப் பணிப்பாhளர், இக்காரியாலயம் எனது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இக்காரியாலயத்தினை இடமாற்றுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸூக்கும் செயற்பாட்டு பணிப்பாளருக்குமிடைய பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது.

இவ்வாக்குவாதத்தின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உங்களைப் போன்ற தனிப்பட்ட நபர்களின் சொத்தல்ல. அரசும், அரச நிறுவனங்களும் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய நிறுவனங்களாகும். நீங்களும் மக்கள் பணிக்காகவே நியமிக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் அதிகாரத்தினாலும், இன ரீதியான செயற்பாட்டாலும் மக்களை தண்டிக்க வேண்டாம் என ஆத்திரத்துடன் கூறிவிட்டு பிரதி அமைச்சர் வெளியேறி சென்றுள்ளார்.

இதனையடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ், சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை மீறியுள்ளார் என அவருக்கு எதிராக எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் உடன் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளாக தெரியவருகிறது. இவ்விடயம் பிரதமர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் அதிகார தோரணையிலும், இன ரீதியாக போக்கினாலும் மக்களினது விருப்பத்திற்கு மாறாக செயற்படுகின்ற விதம் மக்களை அச்சமடைய வைத்துள்ளது. இவ்வாறான அரச அதிகாரிகளினால் நல்லாட்சி அரசின் மீது சிறுபான்மை மக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக் குறியாகிவிடும். இவ்விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இக்காரியாலய இடமாற்ற விடயத்தினை தடுத்து நிறுத்துமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.