இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் : சுஷ்மாவிடம் றிசாத் வலியுறுத்து !

rizhad susma

 

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின்  அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் – சுஷ்மா சுவராஜிடம் றிசாத் வலியுறுத்து   

இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பதினால் எந்த இனமும் பாதிக்கபடாத வகையில், குறிப்பாக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்கு, இந்தியா உதவ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று வலியுறுத்தினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் தழைத்திருந்த தமிழ் முஸ்லிம் உறவு, ஆயுத போராட்டம் உருவானதன் பின்னர் விரிசலடையத் தொடங்கியது என்றும், சமாதானம் ஏற்பட்ட பின்னர் கொண்டுவரப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார் .

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் முரண்படாத வகையிலும், எந்தவொரு இனத்தையும் பாதிக்காத வகையிலும் உருவாகும் தீர்வையே தமது கட்சி ஆதரிக்குமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இனப்பிரச்சிணக்கு காத்திரமான தீர்வொன்று வழங்கப்படுவதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடங்கலாக ஏனைய தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தமக்குள் பரஸ்பரம் கலந்து பேசி ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டி ய பின்னரே இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது மேலானது என்பதையும் இங்கு எடுத்துரைத்தார். 

அரசியலமைப்பு சீர்திருத்தம், தேர்தல் முறை மாற்றங்கள், இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு போன்ற விடயங்களை முன்னெடுக்கும்போது பெரும்பான்மை இனத்தை திருத்திப்படுத்தக்கூடிய வகையில் மட்டும் அவை அமையாது சிறுபான்மை சமூகத்தின் நலன்களை பேணும் வகையில் அந்த முன்னெடுப்புகள் இருக்க வேண்டுமெனவும் அதுவே நடைமுறைச் சாத்தியமானதாக அமையும் எனவும் அமைச்சர் தனது கட்சியின் சார்பாக வலியுறுத்தினார்.   

கடந்த காலங்களில் இலங்கையின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்புத் திட்டங்களில் இந்தியா ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்கு  நன்றி தெரிவித்த அமைச்சர் றிசாத் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்ட வடக்கு கிழக்கு மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவுமென தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்தார்.

12659738_549370548562328_1952984490_n_Fotor