நைஜீரியாவை அச்சுறுத்தும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலி !

2041

 

நைஜீரியா நாட்டை அச்சுறுத்தி வரும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் இந்நோயால் 175 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 101 பேர் பலியானதாகவும் தேசிய நோய்த்தடுப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அபுஜா உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்நோய் பாதிப்பு என சந்தேகப்படும்படியான நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தபோதிலும், தற்போது வெளியான தகவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு 12 பேரும், 2012ல் 112 பேரும் இறந்துள்ளனர். அருகில் உள்ள பெனின் நாட்டில் லாசா காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகியிருப்பதாகவும், 20 பேருக்கு இந்த நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரணம் விளைவிக்கும் கொடிய வைரஸ்களான மார்பார்க், எபோலா போன்று லாசா காய்ச்சலும் மிக மோசமான நோயாகும். 1969ம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு லாசா காய்ச்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Lassa-Fever-360nobs