”கூரையில் ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டம் போனாராம்” !

 

rauff

 

-அபூ மூஸா – 

வெளிநாட்டிலிருந்து ஒரு இலட்சம் வீடுகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நாடு திரும்பப் போவதாக முஸ்லீம் காங்கிரஸின் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. வடக்கிற்கும், கிழக்கிற்கும் இந்த வீடுகளை அவர் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்பதாண்டு காலம் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்த அப்பாவி மக்களுக்கு வீடில்லாத பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினைதான். அதுவும் வடக்கிலே யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு அந்தப்பிரதேசத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம் சமூகம் மீண்டும் அந்தப்பிரதேசத்தில் குடியேற முடியாமைக்கு வீடில்லாமையும் ஒரு பிரதான காரணமே. 

மர்ஹூம் அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்துடனான முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியைப் பிரயோகித்து புத்தளத்தில் தஞ்சமடைந்திருந்த அகதி முஸ்லிம்களுக்கு தற்காலிக இருப்பிட வசதிகளையும் கொட்டில்களையும் அமைத்து கொடுத்தார். காலப்போக்கில் சில இடங்களில் புதிய குடியேற்றங்களையும் ஏற்படுத்தினார். அகதி மாணவர்களின் கல்வித்திட்டத்திற்கு உதவும் வகையில் புலமைப்பரிசில் திட்டங்களை செயற்படுத்தினார். ஆனால் அந்த மகானின் மறைவின் பின்னர் தலைமைப்பதவியை ஏற்ற ரவூப் ஹக்கீம், வடக்கு, கிழக்கு மக்களுக்கு அறிக்கைகள் மூலமும் வாய்ச்சவடால்களாலுமே உதவி பணியாற்றிவருகிறார்.. இற்றை வரை எந்த ஓர் அகதிக்கேனும் கொட்டில் அமைப்பதற்கு  கிடுகு தானும் அவர் கொடுத்ததாக பதிவில்லை. 

எங்கள் நினைவுக்கெட்டிய வரை புத்தளத்தில் அமைந்துள்ள எந்த ஒரு முகாமுக்கும் அவர் சென்றதாக சரித்திரமில்லை. மர்ஹூம் நூர்டீன் மஸூரின் சொந்தப்பணத்திலும் அவர் அரசாங்கத்திடம் கெஞ்சிப்பெற்ற நிதியிலும் அரபு நாடுகளுக்கும் மலேஷியாவுக்கும் சென்று அவரது பிரத்தியேகத் தொடர்பினால் பெற்ற பணத்திலும் புத்தள அகதிக்குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல்களையும், பாடசாலைக்கட்டிடங்களையும் திறந்து வைப்பதற்கு மாத்திரம் ஹக்கீம் அதிதியாக வந்து மாலைகளை கழுத்தில் ஏந்தி வெற்றிக்களிப்புடன் கொழும்பு திரும்புவார். தேர்தல் காலங்களில் புத்தளத்திற்கு வந்து அகதிகள் வாழும் கிராமங்களான உழுக்காப்பள்ளம் (ஹுசைனியா புரம்) கரிக்கட்டை, எருக்கலம்ப்பிட்டி, நாகவில்லு போன்ற இடங்களில் முஸ்லிம் காங்கிரஸின் அப்பாவித்தொண்டர்களால் அமைக்கப்பட்ட மேடைகளில் நின்று கொண்டு அகதிகளை உசுப்பேற்றுவார். பாமர மக்களுக்கு இரத்தக்கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உருப்போட்டுவிட்டு வந்த வீர வசனங்களை பேசி கக்கி அகதி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிடுவார். அது தான் அவர் அகதிச்சமூகத்திற்கு வழங்கிய பேருதவி.

அதிகாரமுள்ள அமைச்சுப்பதவிகளை வைத்துக்கொண்ட காலத்திலேயே அகதி முஸ்லிம்களுக்கு உதவாத தேசியத்தலைவர் இப்போது ’கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்’ என்பது போல கருமமாற்ற தொடங்கியுள்ளார். நூறு நாள் அரசாங்கத்தில் நகர நிர்மாணத்துறை அமைச்சராக இருந்து முஸ்லிம்களுக்கு வீடுகளை கொடுக்காத அமைச்சர் ஹக்கீம் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கான  படங்களை வரையும் படங்காட்டும் இருந்து கொண்டு எவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு உதவப்போகின்றார் அதுவும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகாரமில்லாத இந்த நிலையில் ஒரு இலட்சம் வீடுகளை எங்கிருந்து கொண்டு வரப்போகின்றார் என்பது தான் இன்று எழுந்துள்ள கேள்வி? இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கென புத்தளத்தில் அமைச்சர் ரிசாட் பதியுடீன் தனது அரிய முயற்சியினால் சவூதியின் உதவியுடன் நிர்மாணித்துக்கொடுத்த வீடுகள் தொடர்பாக அரசாங்க மட்டத்தில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊர்வாதங்களையும் கட்சிவாதங்களையும் பெரிது படுத்தி அந்த திட்டத்தை ஹக்கீம் சீர்குலைக்க முயன்றதை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. 

தனது கட்சிக்கும் சவூதியிடம் சென்று பங்கு கேட்ட இந்த முஸ்லிம் காங்கிரஸ் காரர்களின் இழிய புத்தியை என்ன்வென்று சொல்லுவது?

மைத்திரி,-ரணிலின் நூறு நாட்கள் அரசாங்கத்தில் நகர நிர்மாணத்துறை, நீர்வளங்கள் அமைச்சராக பணியாற்றிய தலைவர் ஹக்கீம் தனது சகோதரச் சமூகங்களுக்கு உதவினாரே ஒழிய தனது சொந்தச் சோதரர்களுக்கு எந்த உதவியையும் நல்கவில்லை. கொழும்பு நகரின் ஆமர்வீதியிலும், சிலேவ் ஐலண்டிலும், சகச புர விலும் முஸ்லிம்களின் வீடுகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர், எந்தவிதமான அறிவித்தலுமின்றி சகட்டு மேனிக்கு இடித்து நொருக்கிய போது நீதியமைச்சராக இருந்த ஹக்கீம் அவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க முன்வந்தாரா? 

கொழும்பு வாழ் சேரிப்புற முஸ்லிம்கள் பாதையோரங்களில் படுத்துறங்கிய போது அவர்களுக்கு கை கொடுத்து உதவியவர்கள் யார்? ஐ தே க முக்கியஸ்தர் சட்டத்தரணி சுஜீவ சேனநாயக்க (தற்போது அவர் பிரதியமைச்சர்) போன்ற மனிதநேயம் கொண்டவர்கள் நடுத்தெருவில் நின்ற அபலை முஸ்லிம்களுக்கு உதவியதுடன் நீதித்துறையை நாடுவதற்கும் வழி சமைத்துக்கொடுத்தனர். ஆனால் பிரபலமான சட்டத்தரணிகளை தம் வசம் வைத்திருக்கும் சமூகத்தின் தலைவரென முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் போற்றப்படும் ஹக்கீம் நீதி கேட்டு அந்த மக்கள் நீதிமன்றத்திற்கு செல்லமுடியுமென்ற எந்த வழி துறையையும் காட்டினாரா? கொழும்பு வாழ் முஸ்லிம்களுக்கு உதவ வேண்டிய தார்மீகக் கடமை ஹக்கீமுக்கும் அவரது கட்சிக்கும் உண்டல்லவா?. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தோற்றம் பெற்று கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட காலங்களிலெல்லாம் கொழும்பு முஸ்லிம்களில் ஒரு சாரார் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளித்து அக்கட்சியின் வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்தே வந்தனர். பச்சையிலும் நீலத்திலுமிருந்த பல்விழுந்த சிங்கங்களால் சமூகத்திற்கு பயனில்லை என்ற முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரத்திற்கு அந்த மக்கள் எடுபட்டனர். கொழும்பு முஸ்லிம்கள் தங்கள் சமூகத்துக்கென தனியான,  தனிப்பச்சைக் கட்சி ஒன்று உருவாகி விட்டதென்ற மகிழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கினர். சேரிப்புறங்களிலும் ஏனைய இடங்களிலும் அடுத்தடுத்த வீடுகளில் சிங்கள, தமிழ் சகோதரர்களுடன் பின்னிப்பிணைந்து அன்னியோன்னியமாக வாழ்ந்த முஸ்லிம்கள், குர்ஆனையும் ஹதீஸையும் முன்னிறுத்தி இந்தக்கட்சி தொடங்கப்பட்டதனால் மாற்றின சகோதரர்களுடனான உறவையும் மீறி இந்தக்கட்சிக்கு வாக்களித்தனர். மரம் தமக்கு நிழல் பெற்றுத்தருமென நம்பினர். 

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையின் கீழ் 1988இல் நடைபெற்ற முதலாவது மாகாணசபைத் தேர்தலில் மேல் மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட மஜீத் மெளலவி வெற்றி பெற்றமை கொழும்பு முஸ்லிம்களின் ஆதரவு முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்தமையை ருசுப்படுத்தியது. அதன் பின்னர் இடம்பெற்ற கொழும்பு மாநகரசபைத் தேர்தல்களில் எல்லாம் காலத்திற்கு காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறைந்தது மூன்று அல்லது நான்கு பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு ஆதரவைப் பெருக்கி நின்றது. இத்தனைக்கும் மேலாக பொதுத்தேர்தலொன்றில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறங்கி சபீக் ரஜாப்தீன் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 

இவர் கொழும்பில் பிரபல வர்த்தகர். மூர் விளையாட்டுகழக ஸ்தாபக உறுப்பினர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டுள்ளதனால் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் நல்ல மனம் கொண்டவர். கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும், பராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது மு காவின் தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கும் சபீக் ரஜாப்தீனுக்கு கொழும்பு மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செய்த கபடத்தனங்களும் துரோகத்தனங்களும் தெரியாத ஒன்றல்ல. எனினும் தலைவர் ஹக்கீமின் சுபாவம் நன்கு அறிந்தவராக இருப்பதனால் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தனது தேசிய அமைப்பாளர் பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவையில் அவர் இருக்கின்றார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் இந்நாள் தலைமைகளுடனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவருடனும் மோட்டுத்தனமாக மோதிய கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் மத்திய மாகாண சபையின் உறுப்பினரும் தேர்தலொன்றில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டவருமான தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் ஆசாத் சாலியின் கதியை நினைப்பதாலோ என்னவோ இவர் தனது தலைவர் ஹக்கீமை எதிர்க்க அஞ்சுகிறார்.

தான் படித்த, தன்னை ஆளாக்கிய கொழும்பு நகரில், வறுமையில் வாழும் முஸ்லிம்களுக்க இற்றை வரை எந்த உதவியுமே செய்யாத வக்கில்லாத இந்த தலைவர் ஹக்கீம், புதிதாக வடக்கு, கிழக்குக்கு ஒரு இலட்சம் வீடுகளை கொண்டு செல்லப்போவதாக அறிவிப்பதானது ‘கூரையில் ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்ட புறப்பட்ட’ கதையாகத்தான் இருக்கின்றது. 

கடந்த பொதுத்தேர்தலில் வன்னியில் சரிந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அந்தக்கட்சியின் வேட்பாளரான முத்தலிபாபா பாரூக்கையும் தூக்கி நிறுத்த எடுத்த ஒரு புதிய யுக்தியாகவும் வீட்டுக்கதையைக்கருத முடியும். அத்துடன் தேசியப்பட்டியலில் எம் பி பதவி தருவதாக அட்டாளைச்சேனை, பொத்துவில், கல்குடா வாக்களர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல்’ கொதி சட்டிக்குள் போடப்பட்ட கொழுத்த நண்டு போல’ துடித்துக்கொண்டிருக்கும் மு கா தலைமை வடக்கு, கிழக்கிலே இலட்ச வீட்டுத்திட்டத்தை அறிவித்து அவர்களை திசை திருப்பப்பார்க்கின்றதோ என்ற ஐயப்பாடும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் இல்லாமலில்லை. இருந்த போதும் மர்ஹூம் அஷ்ரப் நாட்டிய அந்த அடி மரம் இன்னும் ஆணிவேருடன் இருப்பதால் தலைவர் ஹக்கீம் என்னதான் நமது சமூகத்தை ஏமாற்றினாலும் ‘லீடர்’ எதையும் சரியாகத்தான் செய்வார் என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. ’வைரவருக்கு நாய் வாய்த்தது போல’ நமக்கு வந்து வாய்த்துள்ளார் நமது தேசியத்தலைவர் ஹக்கீம்.

இத்தனைக்கும் மேலாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுக்க இருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு மக்களிடம் வாக்குகளை வசீகரிப்பதற்கு இந்தக்கட்சிக்கு இவ்வாறான வீட்டுக்கதைகளும் இனப்பிரச்சினை தீர்வில் அதியுச்ச அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கும் தேவையென்ற போலிக்கதைகளும் மீண்டும் உலாவும் என்பதே வெள்ளிடைமலை. 

முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சித்தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு கரையோர மாவட்டம், வடக்கு, கிழக்கில்  முஸ்லிம்களுக்கான கெளரவமான அரசியல் தீர்வு, சாய்ந்தமருது தனியான பிரதேச சபை என்ற முஸ்லிம்கள் மறந்துவிட்ட கோஷங்களை எல்லாம் உச்சாடணங்களாக உரத்துக்கத்தவே செய்யும். அத்துடன் கொழும்பு மாவட்ட வாக்காளர்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கில் கொழும்பிலே 12 மாடிகள் கொண்ட தொடர் மாடி வீடொன்றை துருக்கியினதும் சவூதியினதும் உதவியுடன் கட்டித்தருவதாக வாக்களிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில் இலங்கையின் மிக நீண்ட பாலமான கிண்ணியா பாலத்தை கடந்த அரசு சவூதி அரேபியாவின் உதவியுடன் கட்டிமுடித்து திறந்து வைத்த போது அது முஸ்லிம் காங்கிரசின் வெற்றி என அறிவித்த அக்கட்சி, கிண்ணியா பால அங்குரார்ப்பண நிகழ்வுகளை நெறிப்படுத்திய அப்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின் முகத்தில் கரி பூச முயற்சித்தமையையும் நாம் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவதே பொருத்தமானது.