விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக ஐ.நா. தீர்ப்பு !

julian__120413130100

லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் தான் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. குழுவிடம் புகார் அளித்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. இந்த வழக்கை விசாரித்த ஐ.நா. குழு, ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, விக்கிலீக்ஸின் டுவிட்டர் பக்கத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐ.நா. குழு நாளைக்குள் என்னுடைய வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு எனக்கு எதிராக இருந்தால் வெள்ளிக்கிழமை நான் இங்கிலாந்து காவல்துறையிடம் சரண் அடைவேன்.

ஆனால் தீர்ப்பு எனக்கு ஆதரவாக இருந்தால் என்னுடைய பாஸ்போர்ட்டை கொடுப்பதுடன், இங்கிலாந்து போலீஸ் என்னை கைது செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்க அரசின் அத்துமீறல் தொடர்பாக பல ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. தற்போது லண்டனில் இருக்கும் அதன் நிறுவனரான அசாஞ்சேவிற்கு எதிராக சுவீடனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளதோடு அவர் அங்கு தேடப்பட்டு வரும் நபராகவும் உள்ளார்.

இதனால் லண்டன் போலீஸ் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்யும் பட்சத்தில் அவர் சுவிடனிடம் ஒப்படைக்கப்படுவார். சுவீடன் தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவிடன் அவரை ஒப்படைக்கும் என்று ஜூலியன் அசாஞ்சேவும் அவரது ஆதரவாளர்களும் பயப்படுகிறார்கள்.