நாங்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தண்டனை வழங்கியுள்ளோம் : ஹர்ச டி சில்வா !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. இதை நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டை – சிறிகொத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இன்று அவர் இதனை தெரிவித்தார். 

harsha

மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி மகிழ்ச்சியுடன் இந்த முறை சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் யோசிதவின் கைது பற்றி இவர் கருத்து தெரிவிக்கும் போது,

“நாங்கள் தவறு செய்யாதவர்களை கைது செய்யவில்லை. தவறு செய்தவர்களை தக்க ஆதாரத்துடனேயே கைதுசெய்துள்ளோம். நாங்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தண்டனை வழங்கியுள்ளோம். 

தற்போது சில அரசியல்வாதிகள் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி, அதில் துறவிகளை கைதுசெய்யவுள்ளோம், அரசியல் குற்றவாளிகளை கைதுசெய்யவுள்ளோம் என்று பொய்யான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

ஆனால் நாங்கள் அவ்வாறான பொய்யான பிரசாரங்கள் வழங்காமல் உண்மையாக செய்து காட்டியுள்ளோம். குற்றவாளிகளின் உடைகளுக்கு முக்கியம் கொடுக்கவில்லை. அவர்கள் துறவிகளானாலும் சரி, படைவீரர்களானாலும் சரி, மற்றும் அரசியல்வாதிகளானாலும் சரி அனைவரையும் சமமாக கருத்திற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.

மேலும் முக்கியமாக விடயத்தை மறந்து விடவேண்டாம். நாங்கள் ஆதாரமில்லாமல் யாரையும் கைது செய்யவில்லை. பொலிஸாரினால் உரிய விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் தக்க ஆதாரங்களுடனேயே கைது செய்துள்ளோம்.” 

என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.