மயில் ஆட மரம் அசையும், “தலைமைப் பதவியை எனது நப்ஸ் கேட்கின்றது” !

 

rauff hakeem with rishad
– அபூஷெய்த் –
 
றிஷாட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான கபினட் அமைச்சர். வடபுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கபினட் அமைச்சரும் கூட. கபினட்டில் இளையவர். தனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது அதனை துச்சமென மதித்து முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் ஒரு முள்ளந்தண்டுள்ள அரசியல்வாதி. அவர் தலைமையிலான கட்சி பாராளுமன்றத்தில் 5 எம்.பிக்களைக் கொண்டுள்ளது. வடமாகாண சபையில் அவரது கட்சி சிங்கள சகோதரர் ஒருவர் உட்பட 3 உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மேல் மாகாண சபையில் அவரது கட்சிக்கென ஓர் உறுப்புரிமை கிடைத்துள்ளது. நாட்டின் நாலா பக்கங்களிலுமுள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் அவரது கட்சியைச் சார்ந்தோர் பதவி வகிக்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் திருமலை, மட்டக்களப்பு, வன்னி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் முகவெற்றிலையாகவும் அக்கட்சியின் கோட்டையாகவும் வர்ணிக்கப்படும் அம்பாறைக்குள் நுழைந்து சுமார் 33,000 வாக்குகளை பெற்று சாதனை படைத்த கட்சி.
 
இவ்வாறான மக்கள் செல்வாக்குள்ள ஒரு கட்சியை கலைத்துவிட்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அமைச்சர் ஹக்கீமை தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டு அமைச்சர் றிஷாட் அரசியல் நடத்த வேண்டும் என்ற கேலிக்கூத்தான கட்டுரை ஒன்று அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவரால் எழுதப்பட்டு மு.கா இணையத்தளங்களிலும் ஏனைய சில இணையத் தளங்களிலும் வெளிவந்துள்ளன.
 
முஸ்லிம் சமூகப்பிரச்சினைகளில் அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து செயற்படத் தயாரென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்குக்கு தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி “நிபந்தனையின்றி அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து தான் பணியாற்ற தயார்” என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாக அக்கட்டுரையில் கதை சோடிக்கப்பட்டு, பல்வேறு புனைகதைகளையும் புனைந்து அந்த ஆக்கம் வெளிவந்துள்ளது. அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான தனது காழ்ப்புணர்வை அந்;த கட்டுரையாளர் கொட்டித் தீர்த்துள்ளார்.
slmc-and-acmc_Fotor
 
“அமைச்சரின் கருத்து இதயசுத்தியாக இருக்குமானால் அந்த அறிவிப்பு வரவேற்கப்படக் கூடியதென்றும், அவ்வாறாயின் அது வரலாற்று சிறப்பு மிக்கதென்றும் கூறியுள்ள இந்த கட்டுரையாளர் ஆங்காங்கே அமைச்சரை இச்சகம் பேசி (புகழ்வது போல் இகழ்ந்து) சிறுபிள்ளைத்தனமான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
 
இந்தச் சிறுமதியாளரான எழுத்தாளரின் ஆக்கத்துக்கு பதில் கொடுப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களின் முகத்திரையைக் கிழிப்பதே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
 
அரசியல் கட்சி என்பது இறைவனின் வேதமன்று. அது மனிதனால் ஆக்கப்பட்டது. மாதலைவர் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் அவருடைய கட்சி புனிதம் இழந்தது. கட்டுக்கோப்பையும் இழந்தது. காரணம், அக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றவர்களால் சமூகத்துக்கு உருப்படியான பலன் கிடைக்கவில்லை. எனவேதான் கட்சியை வளர்த்த பலர் மு.காவை விட்டகன்று வேறு கட்சியமைத்தனர். முஸ்லிம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் வேறு கட்சிகளிலும் இணைந்தனர். அப்படியானவர்கள் அனைவரும் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் என்று கூறுவது அறியாமையின் உச்சக்கட்டம். மற்றவர்களைப் போல் தான் றிஷாட்டும் புதுக்கட்சி அமைத்து மக்கள் பணியாற்றி வருகின்றார்.  
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் மறைந்ததன் பின்னர் வெறுமனே அறிக்கைகளாலும் வாய்ச்சவடால்களாலும் மட்டுமே கட்சியையும் சமூகத்தையும் நடாத்தி வரும் இந்நாள் தலைவர் ஹக்கீம் இற்றைவரை சமூகத்துக்காக சாதித்ததென்ன?
 
அரசு-புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் நடந்த போதெல்லாம் அரசின் பிரதிநிதியாக அங்கு கோட்-சூட்டுடன் சென்று தலையாட்டி பொம்மையாக மட்டுமே இருந்தவர்தான் அவர். அரசியல் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் சமூகம் தனித்தரப்பாக அல்லது சமதரப்பாக பங்குபற்ற வேண்டும் என்ற குரல்கள் அந்த சமூகத்தில் இருந்து ஓங்கி ஒலித்த போதெல்லாம் அந்த சந்தர்ப்பத்தில் வீராப்பு மட்டும் பேசி விட்டு பின்னர் அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காதவர்.  தான் மட்டும் அரசின் பிரதிநிதியாக பேச்சு மேசையில் அமர்ந்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம் சமூகத்தின் இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்கைளையும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு புலிகளின் அரசியல் ஆலோசகர்p அன்டன் பாலசிங்கம் கோரிய போது, சமூகம் தொடர்பான எந்தவிதமான தயார்படுத்தலும் இன்றி வெறுங்கையுடன் சென்றிருந்த ஹக்கீம் அங்கே வெலவெலத்து நின்றார். இவ்வாறுதான் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்துக்கு பணியாற்றியது.
 
அதேவேளை, அகதியாக வாழ்ந்த றிஷாட் சமூகத்தின் மீதான கவலையினால் பிரயத்தனப்பட்டு எம்.பியாகி, அமைச்சராகி தன்னைப்போன்ற அகதி முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் சேவை செய்ய விரும்பினார். முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலம் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தனால் இன்று முஸ்லிம் சமூகம் குறிப்பாக வடபுல முஸ்லிம் அதகிகள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்கின்றது. அத்துடன் முஸ்லிம் சமூகத்துக்கு தனது சக்திக்கு உட்பட்டவரை பணியாற்றி வருகின்றார். இது சமூகம் அறிந்த ஒன்று. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக முஸ்லிம்; காங்கிரஸில் இருந்து றிஷாட் வெளியேறியதை இந்தக் கட்டுரையாளர் துரோகம் என்று கருதுவதுதான் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கின்றது.
 
இந்தத் தருணத்தில் றிஷாட் வெளியேறியதை சமூகத் துரோகம் என வர்ணிக்கும் இந்த கட்டுரையாளரும் முஸ்லிம் காங்கிரஸ்காரரும் நோர்வே நாட்டுக்கு ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு சென்ற பின்னர் அவரை தலைமைப் பதவியில் இருந்து கவிழ்க்க சூழ்ச்சி செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கட்சிக்கு இழைத்த துரோகத் தனத்தை எவ்வாறு வர்ணிக்கப் போகின்றார். அது மட்டுமன்றி றிஷாட்டுடன் வெளியேறிய ஹக்கீமின் மைத்துனர் இனாமுல்லாவை மீண்டும் கட்சியில் அரவணைத்து உயர் பதவி கொடுத்தமையை என்னவென்று கூறுவது? சந்திரிக்கா ஆட்சியிலே இரவோடு இரவாக அதாவுல்லா, மர்ஹ_ம் அன்வர் இஸ்மாயிலுடன் இணைந்து மு.காவை விட்டு பொது ஜன ஐக்கிய முன்னணியில் இணைந்து பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுத்த பிரதியமைச்சர் ஹரீசை இந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் எவ்வாறு அழைக்கப் போகின்றனர். றிஷாட்டுக்கு ஒரு நியாயம். ஹாபிஸ், ஹரீசுக்கு இன்னொரு நியாயமா? இதுதானா உங்கள் கட்சியின் சமூகத் துரோகத்துக்கான வரைவிலக்கணம்?  
 
முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் எவ்வாறு உள்வாங்கப்பட்டார் என்பது தற்போதைய இளைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. மாதலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை கட்டி வளர்த்த போது அவருக்கு ஒரு கட்டத்தில் கைகொடுத்து உதவியவர்தான் பெயார்லைன் புஹாரிதீன் ஹாஜியார். இந்த ஹாஜியார் பெயார்லைன் குறூப் நிறுவனங்களின் உரிமையாளர். சமூகத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவர். கொடைவள்ளல். அதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் எம்.பி ஆசனத்தை புஹாரிதீன் ஹாஜியாருக்கு வழங்கியது. தனது கட்சிக்காக பாடுபட்ட அந்த பரோபகாரிக்கு மர்ஹ_ம் அஷ்ரப் எம்.பி வழங்கி அவரைக் கௌரவித்தார். புஹாரிதீன் ஹாஜியாரின் பெயார்லைன் நிறுவனத்தின் சட்ட அதிகாரியாக அப்போது பணியாற்றியவர்தான் மு.காவின் இந்நாள் தலைவர் ஹக்கீம். இந்த உண்மையை எத்தனை பேர் அறிவார்களோ? மாதலைவர் அஷ்ரப் பொரலையில் அமைந்திருந்த பெயார்லைன் நிறுவனத்துக்கு ஒருமுறை புஹாரிதீன் ஹாஜியாரைச் சந்திக்க சென்ற போது, அந்த நிறுவனத்தில் வைத்து ஹாஜியாரினால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் மரக்கட்சியின் இந்நாள் தலைவர். அந்த தொடர்பே ஹக்கீம் கட்சிக்குள் உள்வாங்கப்படுவதற்கு அடிகோலியது. காலப்போக்கில் மர்ஹ_ம் அஷ்ரப் தனது கட்சியின் செயலாளர் நாயகமாக ஹக்கீமை நியமித்தார். அடுத்து வந்த பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் தேசியப் பட்டியலில் எம்.பி பதவியையும் வழங்கினார். குழுக்களின் பிரதித்தலைவராக அவரை ஆக்கி பாராளுமன்ற அரியணையில் அமர வைத்து அலங்கரித்தார்.
 
ஆனால், மர்ஹ_ம் அஷ்ரப் மறைவின் பின்னர் கட்சியின் உயர் பீடத்தினரால் இணைத்தலைவர்களில் ஒருவராக அவரது மனைவி பேரியல் அஷ்ரப் நியமிக்கப்பட்டார். மற்றொரு இணைத்தலைவரான ஹக்கீம் இதனை சிறிதளவேனும் விரும்பவில்லை. சதிமுயற்சிகளின் மூலம் இணைத்தலைவர் பதவியைப் பறித்தெடுத்து தனித்தலைவரானார் ஹக்கீம். “தலைமைப் பதவியை எனது நப்ஸ் கேட்கின்றது” என உயர்பீட கூட்டமொன்றில் பச்சையாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருந்தார். இத்தாவில் இருந்த மாதலைவரின் மனைவியை நோகடிக்கக் கூடிய கருத்துக்களையும் வெளிப்படுத்தினார். மர்ஹ_ம் அஷ்ரப் தனது இறுதிக்காலத்தில் இன நல்லுறவைப் பேணும் வகையில் உருவாக்கிய அவரது மற்றொரு கட்சியான தேசிய ஐக்கிய முன்னணி எனும் நுஆ கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் திருமதி பேரியல் அஷ்ரபை அகற்றினார். நீதி மன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. இந்தத் துரோகத்தனத்தை எவ்வாறு அழைப்பது? தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த மாதலைவர் அஷ்ரபுக்கு ஹக்கீம் செய்த கைமாறு இதுதானா?
 
தனக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அமைச்சர் ஹக்கீமின் உதவியை அமைச்சர் றிஷாட் நாடுவதே வழமையாகிவிட்டதென குறிப்பிட்ட கட்டுரையில் கட்டுரையாளர் விபரித்து தனது கூற்றை வலுப்படுத்தும் வகையில் ஏதோ சில பிதற்றலான கூற்றுக்களையும் விபரித்திருக்கிறார். இதை வாசிக்கும் போது சிரிப்பதா அழுவதா? என்று எமக்கு புரியவில்லை.
 
அமைச்சர் றிஷாட்டின் வழிகாட்டலிலும் ஒத்துழைப்புடனும் வில்பத்து காட்டை முஸ்லிம்கள் அழித்து வீடு கட்டுவதாகவும், இதனால் இயற்கைவளம் நாசமாக்கப்படுவதாகவும் சிங்கள சகோதரர் மத்தியிலே இனவாதிகளும், இனவாத ஊடகங்களும், இனவாத சூழலியலாளர்களும் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு அமைச்சர் றிஷாட்டை நீதிமன்றம் வரை கொண்டு சென்ற போது சமூகத் தலைவர் என முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் வர்ணிக்கப்படும் இந்த ஹக்கீம் அந்த மக்களுக்கும் றிஷாட்டுக்கும் செய்த உதவிகள்தான் என்ன? இனவாதிகளுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் தன்னை நல்ல பிள்ளையாக காட்டுவதற்காக மௌனம் காத்தார். அமைச்சர் றிஷாட் தன்னந்தனியனாக நின்று போராடிய போதும் கட்டுரையாளர் கூறுவது போல பதறியடித்துக்கொண்டு ஹக்கீமிடம் ஓடினாரா?
 
25 ஆண்டு காலம் அகதி முகாம்களிலே காலத்தை ஒட்டும் அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது பாரம்பரிய இடங்களுக்கு சென்ற போது தமிழ் இனவாதிகள் அவர்களை குடியேற விடாமல் தடுத்தனர். வடக்கில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை காலத்துக்குக் காலம் கொள்ளையடித்துச் செல்லும் அது தொடர்பில் எந்தவொரு வார்த்தையேனும் பேசாமல் இருந்ததன் மர்மம் என்ன? இந்த விவகாரத்திலும் அமைச்சர் றிஷாட் தன்னந்தனியனாக நின்று வடபுல முஸ்லிம் சமூகத்திற்காக இன்றும் போராடி வருகிறாரே ஒழிய அமைச்சர் ஹக்கீமின் தயவை நாடி அவரது கொள்ளுப்பிட்டி மாளிகைக்குச் சென்று கதவை எப்போதாவது தட்டினாரா?
 
மன்னார் உப்புக்குளம் கோந்தப்பிட்டி மீனவர்களின் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து மன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறியப்பட்டது. இந்த சம்பவம் இடம் பெற்ற போது கொழும்பில் இருந்த அமைச்சர் றிஷாட் இச் சம்பவத்தை கேள்வியுற்று, அந்த மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மன்னாருக்கு விரைந்தார். இதுதான் ஒரு சமூகத்தலைவனின் கடமை. குறித்த சம்பவத்துடன் எந்தத் தொடர்புமே இல்லாத அமைச்சரை வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்படுத்தி வழக்கு தொடரப்பட்ட போது அப்போது நீதி அமைச்சராக இருந்த ஹக்கீமிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள் என்று எப்போதாவது கெஞ்சி இருக்கிறாரா?
 
அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைகளிலும் அதிகாரப்பகிர்வு முயற்சிகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு நன்மதிப்பும் நற்பெயரும் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் இணைந்து செயற்படத் தயார் என்று றிஷாட் அறிவித்துள்ளதாகவும் இந்த அழைப்பில் ஓர் உள் நோக்கம் இருப்பதாகவும் கட்டுரையாளர் கதையளக்கிறார்.
 
மர்ஹ_ம் அஷ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம்களின் அரசியல் தீர்வு தொடர்பில் வழங்கிய உருப்படியான ஆவணங்கள் ஏதும் உண்டா? அவ்வாறான எந்த முயற்சியையும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதா? மர்ஹ_ம் அஷ்ரபின் சிந்தனையில் உருவான தென்கிழக்கு அலகு, முஸ்லிம் மாகாணக் கோரிக்கை, இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான பிராந்திய சுயாட்சி என்ற சொற்றொடர்களையே இன்னும் உச்சாடனமாக – வாய்ப்பாடாக கூறிவரும் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் இதுவரை காலமும் உருப்படியான எந்த முயற்சிகளையும் முஸ்லிம் சமூகத்துக்கு மேற்கொள்ளாத நிலையில் இனியுமா எதையும் செய்யப் போகின்றது. இந்த இலட்சணத்தில் அமைச்சர் ஹக்கீமுக்கு நன்மதிப்பு கிடைத்துவிடும் என்ற அச்சம் றிஷாட்டுக்கு வருவதாக ஒரு கற்பனைக் கதை சோடிக்கப்பட்டுள்ளது.
 
சமூகத்திற்குரிய பணி கட்சித் தலைவர்களின் அதிகாரச் செருக்கினால் கைநழுவிப் போய் விடுமோ என்ற சமூகப் பொறுப்பும் கடமையும் மேலோங்கியதனாலேயே இந்த அழைப்பை ஹக்கீமுக்கு றிஷாட் விடுத்திருக்கலாம்.
 
கபடத்தனங்களாலும் சதி, சூழ்ச்சிகளினாலும் கட்டியெழுப்பப்பட்ட மு.கா. தலைமைத்துவத்திற்கு மரணத் தறுவாய் வரைக்கும் இவ்வாறான நல்ல நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் மீதான செயற்பாடுகளில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். “சாணையுடன் வந்தது சந்தூக்கு வரை போய்த்தான் முடிய வேண்டும்”
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகளும் இயக்கங்களும் அங்கம் வகிப்பதாகவும் அவைகள் ஒரே குடையின் கீழ் செயற்படுவதாகவும் தனது கட்டுரைக்கு மெருகூட்டியுள்ள இந்தக் கட்டுரையாளர் முஸ்லிம் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் ஒரே தலைமையில் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, றிஷாட்டும் தனது கட்சியை கலைத்து விட்டு மு.காவுடன் சங்கமிக்க வேண்டும் என் சுட்டிக்காட்டுகின்றார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் எல்லோரையும் அரவணைத்து செல்லும் ஒரு கட்சியா? என அக்கட்சியின் கடந்த கால நடவடிக்கைகள் சான்று பகரும். 2002 ஆம் ஆண்டு ரணில்-பிரபா ஒப்பந்தம் ஏற்பட்டு இலங்கையில் சமாதான சூழ்நிலை உருவான போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் புலிகளுடன் பேசி சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தனர். இது தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளும் கொழும்பில் ஒன்று கூடி முஸ்லிம் அமைப்பொன்றை உருவாக்கினர். முன்னாள் சபாநாயகர் எம்.எச். மொஹமட் தலைமையில் ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், மயோன் முஸ்தபா மற்றும் அப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் எம்.பிக்கள், அமைச்சர்கள் அந்த அமைப்பில் உள்வாங்கப்பட்டு புலிகளுடன் வன்னிக்குச் சென்று பேச்சு நடாத்துவதென்ற முடிவும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மாற்றமாக முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில் நோர்வேயின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவசர அவசரமாக வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தது. அவருக்கு கைலாகு கொடுத்து விருந்துண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்தது. முஸ்லிம்களின் கட்டுக்கோப்பான அமைப்பை தனது சுயநலத்துக்காக உடைத்து தான் மட்டும் பிரபாவுடன் பேசி நல்ல பெயர் வாங்க முடியும் என்ற முயற்சியின் உச்சக் கட்டமே அது. ஆனால், நக்குண்டார் நாவிழந்தார் என்பதற்கொப்ப அந்த ஒப்பந்தத்தால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தப் பயனும் கிட்டவில்லை. இவ்வாறான இழி சிந்தனையுள்ளவர்களுடன் எவ்வாறு சமூகத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவது?
 
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் றிஷாட் ஒரு பலமான அமைச்சராக இருந்ததாகவும் நல்லிணக்க அரசாங்கத்தில் அந்த நிலை இல்லை என்றும் கட்டுரையாளர் கவலைப்படுகிறார். கண்ணீர் வடிக்கின்றார். நல்லிணக்க அரசாங்கத்தில் தங்களது தலைவர் ஹக்கீம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதாக நண்பர் புளகாங்கிதம் அடைகிறார்.
 
தேசிய அரசாங்கம் பதவியேற்று 100 நாட்கள் காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர் ஹக்கீம் பணியாற்றினார். மிகவும் பொறுப்பு வாய்ந்த, பலமான இந்த அமைச்சின் மூலம் கொழும்பில் மஹிந்த அரசாங்கத்தினால் வீடுகள் தகர்த்தெறியப்பட்ட எத்தனை முஸ்லிம்களுக்கு வீடு பெற்று கொடுத்தார்? கடந்த அரசாங்கத்தினால் வீடுகளை இழந்து இன்னும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் முஸ்லிம்கள், “எங்களில் ஒருவர் நகர அபிவிருத்தி அமைச்சராக வந்து விட்டார்” ;என்ற அதீத நம்பிக்கையில்; பலமுறை அவரின் அலுவலகத்துக்கும்;, வீட்டுவாசல்படிக்கும் மாறி மாறி ஏறியிறங்கி தங்களது கஷ்டங்களைக் கூறி கண்கலங்கிய போதும் இவர்களில் ஒருவருக்கேனும் அவர் வீடு பெற்றுக் கொடுத்தாரா? முஸ்லிம்களுக்கு உதவி செய்தால் மற்றைய சமூகம் தன்னை மதிக்காது என்ற எண்ணப்போக்கே அவரிடம் இருந்தது. ஆனால்; முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்த தலைவரின் நல்ல மனத்தை என்னவென்று சொல்வது?.
 
100 நாட்கள் ஆட்சியில் நகர நிர்மாணத் துறை அமைச்சராக இருந்த ஹக்கீம் பின்னர் தேசிய அரசாங்கத்தில் நகர திட்டமிடல் அமைச்சராக நியமிக்கப்பட்டமை அவர் தேசிய அரசாங்கத்தில் சக்திவாய்ந்த அமைச்சர் என்ற கருத்தினையா கட்டுரையாளருக்கு வழங்குகின்றது. மஹிந்தவின் ஆட்சியிலும் 100 நாள் ஆட்;சியிலும் தேசிய அரசாங்க ஆட்சியிலும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக பணிபுரியும் றிஷாட் பதியுதீனை ஒரு பலம் இழந்த அமைச்சராகவா கட்டுரையாளர் நோக்குகின்றார்.
 
இவ்வாறான யதார்த்தங்களை புரிந்து கொள்ள முடியாத மடைத்தனத்தில்  கட்டுரைகளை தொடர்ந்தும் எழுதிக்கொண்டு இருப்பது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே எமது பணிவான கருத்தாகும்.