சூழ்ச்சி ஒன்று இயக்கப்படுகின்றது -மகிந்த

mahinda  எனக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெற ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள போது பாதுகாப்பு உத்தியோகத்தரான இராணுவ கோப்ரல் குமார கைது செய்யப்பட்டார். தற்போது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவையனைத்தும் அரசியல் சூழ்ச்சியொன்றூடாக இயக்கப்படுவதாகவே தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  ஊடகங்களுக்கு விஷேட அறிக்கையொன்றூடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசியல் மற்றும் தனிப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இராணுவ வீரர்களை தொடர்புபடுத்தக் கூடாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்ததாக எனது பாதுகாப்புக்கு கடமையில் இருந்த  இராணுவ கோப்ரல் சேனக குமாரகே கைது செய்யப்பட்டுள்ளார்.  தன்னுடைய கோரிக்கையின்படியே அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஹம்பாந்தோட்டை கூட்டத்திற்குச் சென்றார்.

பொலிஸ் சோதனையின் போது பிரபுக்கள் வாயிலால் நாமலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்தே அவர்கள் சாதாரண வாயிலால் சென்ருள்ளனர். இதன் போது இராணுவ கோப்ரல் அங்கு வாயிலில் நின்றுள்ளார். அங்கு வந்துள்ள பொலிஸ் அதிரடிப்படை வீரர் அவரை விசாரித்துள்ளார். தான் இராணுவ வீரர் என்பதை அப்போதே அவர் கூறியுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் நாமலுடன் வீடு திரும்பியதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூட்டத்தினுள் துப்பாக்கியை எடுத்துச் செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் உடன் கைது செய்திருக்கலாம் அல்லவா? ஏன் இரு சில நாட்கள் கழித்து கைது  செய்ய வேண்டும். பாதுகாப்பு உத்தியோகத்தர் தனது ஆயுதத்தை சாரதியான மற்றைய இராணுவ வீரரிடம் கொடுத்துவிட்டே சென்றுள்ளார். இதனை சாரதியும் வாக்கு மூலத்தில் உறுதி செய்துள்ளார்.

தவறு செய்யாத இராணுவ கோப்ரலை ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி நாமலின் பெயரையும் இணைத்து தற்போது கதை கட்டுகின்றனர்.

இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டமை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பழிவாங்கலின் அங்கம்.பஸில், ஜோன்ஸ்டனின் கைதுகளும் சூழ்ச்சி நிரம்பியது  என குறிப்பிடப்பட்டுள்ளது.