டொலரின் பெறுமதி வரலாற்றில் உச்சத்தைத் தொட்டது !

dollar1

 டொலரின் பெறுமதிக்கு ஏற்ப ரூபாவின் பெறுமதியை தக்கவைத்து கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த காலங்களில் செயற்கையாக கட்டுப்படுத்தப்பட்ட ரூபாவின் பெறுமதியை சீர்செய்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்றில் அதி கூடிய விலையாக டொலர் ஒன்றின் விலை இன்று பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் அறிவிப்பின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 145 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 133 ரூபாவாக காணப்பட்டதுடன் அத்தொகையானது இன்று 8% இனால் அதிகரித்துள்ளது.

டொலரின் விலையை நிர்ணயிப்பதற்காக சந்தையில் மத்திய வங்கியின் டொலர் விநி​யோகம் இடை நிறுத்தப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகியது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண;

ஜனவரி மாத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அந்நியசெலாவணி இருப்பாக 8.3 பில்லியன் டொலராக காணப்பட்டது. அவ்வாறானதொரு நிலையில் தான் நாங்கள் பொறுப்பளித்தோம். ஆனால் அதனை 6.2 பில்லியனிற்கு குறைத்து விட்டனர். இந்த தொகைக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1.3 பில்லியனும் உள்ளடங்குகின்றது. ஆகவே உண்மையான தொகை 4 பில்லியனே. தற்போது நிலைமை மோசமாகி வருகின்றது. ரூபாவின் வீழ்ச்சியை தடுப்பதற்கு டொலரை விற்பனை செய்ய முற்பட்ட போதிலும் அதனை தற்போது நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேர்தன;

டொலருக்கான பெறுமதியை தக்க வைத்து கொள்வதற்கு அந்நியசெலாவணியை சந்தையிலிட்டோம். இது எமது ஏற்றுமதி வருமானத்திற்கு பாரியளவில் தாக்கம் செலுத்தியது. அதே போன்று அந்நிய செலாவணியும் குறைந்தது. அந்நிய செலாவணி இருப்பாக இலங்கையில் காணப்படுவதில் 80 % சர்வதேச கடன்களும் நிவாரண உதவிகளுமே. இதில் டொலரை கட்டுப்படுத்த சென்றால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும். கடந்த காலக்கட்டத்திற்குள் உண்மையாகவே காணப்பட வேண்டிய நிலையில் டொலர் காணப்பட வில்லை.