கருப்புபணத்தை திருப்பி அனுப்புவதில் உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை : மோடி !

ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

 

துருக்கி நாட்டில் உள்ள ஆன்டல்யா நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு நடந்தது. துருக்கி தலைநகர் அங்காராவில் கடந்த மாதம் இரட்டை குண்டு வெடிப்புகளை தீவிரவாதிகள் நிகழ்த்தி 90-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததால் மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதில், கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒடுக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது:-

narendira modi

தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. தீவிரவாதத்தின் பழைய கட்டுமானங்கள் இன்றும் அப்படியே உள்ளன. உலகில் இன்றும் கூட சில நாடுகள் தீவிரவாதத்தை தங்களுடைய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன.

எனவே தீவிரவாதத்தையும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். மனித பண்பின் மதிப்பை பாதுகாக்க தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவேண்டும். தீவிரவாதம் மற்றும் மதம் இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை துண்டித்து, தீவிரவாதத்துக்கு எதிராக போராட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

உலகளாவிய தொடர்புகள், முகமைகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், உள்நாட்டில் வளரும் தீவிரவாதம், கணினி வழி ஆகியவற்றின் மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்களைச் சேர்ப்பதும், அதற்காக பிரசாரம் செய்வதும் என இன்று தீவிரவாதத்தின் குணாதிசயம் மாறிவிட்டது. எனவே இதற்காக உலக நாடுகள் புலனாய்வில் ஒத்துழைத்து செயல்படுவதையும், தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவதையும் அதிகரிக்க வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிராக செயல்பட மதத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், கருத்து உருவாக்குவோர் அடங்கிய ஒரு இயக்கம் தேவை. குறிப்பாக இந்த இயக்கம் இளைஞர்களிடம் தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.

ஊழல், கருப்பு பண பிரச்சினைகளில் பூஜ்ஜியம் அளவு கூட பொறுத்துக் கொள்ளாத நிலைப்பாட்டை இந்தியா கொண்டு உள்ளது. கணக்கில் காட்டப்படாத சொத்துகள், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பணம் ஆகியவற்றுக்காக புதிய சட்டமும் இயற்றப்பட்டு இருக்கிறது.

வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கி வைத்திருக்கும் பணத்தை அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப சர்வதேச அளவில் பெரும் ஒத்துழைப்பு நமக்குத்தேவை. இதில் வெளிநாட்டு வங்கிகள் கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான ரகசியத் தன்மைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

பன்னாட்டு நிதியம் தொடர்ந்து ஒதுக்கீடு முறையிலான நிறுவனமாகவே திகழ வேண்டும். நிதியை கடனாக வாங்குவதை சார்ந்து இருக்கக் கூடாது. இது குறித்த ஒதுக்கீடு சீர்திருத்தங்களை அமெரிக்கா விரைவில் மேற்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.