எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் : கருணாநிதி !

தங்களுக்காக உழைப்பவர்கள் யார்? என்பதை அறிந்து, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

karunanithi

பேரவையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடுக்கப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானங்களும், கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பல்வேறு துறைகளிலிருந்து பதில்கள் வரவில்லை, வரவில்லை என்ற பதிலைத்தான் பேரவைத்தலைவர் தெரிவிக்கிறார். தொடர் கூட்டமே முடிந்து விட்டது. 48 ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டதில், ஒன்று கூட அரசால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 
300 கவன ஈர்ப்புத் தீர்மானங்களில் 14 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மட்டுமே பெயருக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்றால், எந்த அளவுக்கு மாநில மக்களின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியிலே முன்னுரிமை தரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று டெல்டா மாவட்ட விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததைப் போல, கர்நாடக அரசு கை விரித்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 92 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா தர வேண்டும். கர்நாடக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் வரை 48 டி.எம்.சி. தண்ணீரை நமக்குத் தர வேண்டியுள்ளது. அக்டோபர் முதல் வரும் 2016 ஜனவரி வரை 47.5 டி.எம்.சி. தண்ணீரைத் தர வேண்டும். ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் அங்கும் மழை இல்லாமல் வறட்சி நிலை நிலவுவதாகவும், தண்ணீர் தர இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவித்து விட்டார்கள். எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
தமிழக அரசின் சார்பில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டால், உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதுகிறது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே சூரிய மின் சக்தி நிலையம் அமைக்க தமிழக அரசு அதானி குழும நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்ததின் தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை குறைந்த விலைக்கும், முறைகேடாகவும் இடைத் தரகர்கள் மூலமாக வாங்குகின்ற முயற்சி அங்கே நடைபெறுகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் ஆத்திரமடைந்து அதானி குழும ஊழியர்கள் இரண்டு பேர் அரிவாள் வெட்டுக்கு ஆளாகி மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 
பேரவையில் கடைசி நாளன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் ஒன்று பெண் எழுத்தாளருக்கு “அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் அளிக்கப்படவிருக்கிறதாம். அரசு என்ன, இவர்களுடைய சொந்தக்கட்சி உடைமையா? ‘அம்மா’ மாளிகை, ‘அம்மா’ மருந்தகம், ‘அம்மா’ தண்ணீர், ‘அம்மா’ உப்பு, ‘அம்மா’ சிமெண்டு, ‘அம்மா’ உணவகம், ‘அம்மா’ குடிநீர், ‘அம்மா’ அமுதம் பல்பொருள் அங்காடிகள், ‘அம்மா’ விதைகள், ‘அம்மா’ குழந்தை நலப்பரிசு பெட்டகம், ‘அம்மா’ முழு உடல் பரிசோதனை – என்ற வரிசையில் இப்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகளுக்குப் போட்டியாக, “அம்மா இலக்கிய விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் துணை மதிப்பீடுகள்கூட வெறும் 1,012.30 கோடி ரூபாய்க்குத்தான் கோரப்பட்டு ஒப்புதல் தரப்பட்டுள்ளது! மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது? இந்தத் தொடரில் அதாவது நான்கரை ஆண்டுகளில் முதல்-அமைச்சர் செய்த 181 அறிவிப்புகளுக்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? அந்தத்தொகையை எந்த நிதியிலிருந்து ஒதுக்கப் போகிறார்கள்? அந்த நிதிக்கு அவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? ஒப்புதல் பெறப்படா விட்டால் அவைகள் எல்லாம் நிறைவேறாத திட்டங்களா? 

இந்தத்திருகுதாள வேலைகளையெல்லாம் புரிந்து கொண்டு தங்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்பதைக் கூர்ந்து கவனித்து, கணித்து, அதற்கேற்பச் செயல்பட முன்வர வேண்டுமென்பதுதான் மிகப்பெருவாரியான தமிழர்களின் விருப்பம். 
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.