சிறுவர் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் !

சத்தார் எம் ஜாவித்
சிறுவர் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இன்று சர்வதேச சிறுவர் தினமாகும் இந்த வகையில் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இத்தினத்தை கொண்டாடுகின்றனர். என்றாலும் தற்காலத்தில் சிறுவர் தினம் கொண்டாடுவது அவ்வளவு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றல்ல.

காரணம் கடந்த காலங்களை விட இன்று சிறுவர் துஸ்பிரயோகங்களும், சிறுவர் கொடுமைகளும், சிறுவர்கள் ஈவிரக்கமற்ற வகையில் கொலை செய்யப்படுவதும் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகவும் கண்டிக்கத்தக்க விடயமாகவும் சமுகத்தில் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்யும் விடயமுமாகவே இருக்கின்றது.

children_safety2
ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட நாடுகள் இன்று சிறுவர் தினத்தைக் கொண்டாடினாலும் அவை தத்தமது நாடுகளில் இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்பதனை நாளாந்தம் இடம் பெற்று வரும் சம்பவங்களும் அதன் பின்னணிகளும் சாட்சி பகருகின்றன.

 

ஆரசியலமைப்பு மற்றும் நீதிமன்றச் சட்டங்களுக்கு அப்பால் சர்வதேச சிறுவர் சட்டதிட்டங்களும் உரிய முறையில் ஒவ்வொரு நாடுகளிலும் அமுல்படுத்தப்படுவதுடன் தேவையானளவு விழிப்புணர்வுத் திட்டங்களை கட்டாயப்படுத்தி அவற்றை செயற்படுத்த வேண்டிய தேவை தற்போது அவசரமாக உள்ளமையும் நடைபெறும் சம்பவங்களினூடாக அறிய முடிகின்றது.

 
சிறுவர்களை பொறுப்பற்ற விதத்தில் துன்புறுத்துவதும், கொலை செய்வதும் மனித நேயத்திற்கு அப்பால் மிருகத்தனமான முறையில் தொடராக இடம் பெறுவது இலங்கையில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மற்றவர்களைப் பலிவாங்குவதற்காக காமுகர்கள் அப்பாவிச் சிறுவர்களை மர்மமான முறையில் கடத்தப்பட்டு கண்ணால் கண்டு கொள்ள முடியாதளவு வேதனை செய்து கொலை செய்வது அனைவரையும் கவலைகொள்ளவும், ஆத்திரமடையவும் செய்கின்ற விடயமாக உள்ளது.

 

மேற்படி நிலைமைகளை இலங்கையில் முற்றுமுழுதாக ஒழிப்பதற்கான ஒரு சிறந்த பொறிமுறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன் இந்த விடயத்தில் பெற்றோரின் கடமையும், பிள்ளைகள் மீதான பொறுப்புணர்வும் அதிகளவு காணப்பட வேண்டும் பெற்றோரின் அதிகளவான கவனயீனம்தான் பல பிள்ளைகள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைகின்றமையை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சமுகத்தில் பொதுமக்களும் சிறுபிள்ளைகளின் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் யாராகவும் இருக்கலாம்.

 

அவர்கள் தமது பிள்ளைகள் என்ற கண்ணோட்டத்தில் பொதுமக்கள் சற்று அவதானமாக இருப்பதும் பிள்ளகைளின் விடயத்தில் சற்று பாதுகாப்பை ஏற்படுத்தும் எனலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் சமுகம் சிறுவர்கள் விடயத்தில் அவதானமாக இருப்பதுடன் சிறுவர் துஸ்பிரயோக தண்டனைகள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் அத்துடன் மேற்படி விடயங்களில் ஈடுபடுபவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் சட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஒருசில சட்டத்தரணிகளின் பணம் உழகை;கும் செயற்பாடுகள் அவர்கள் குற்றமிழைத்த போதிலும் விரைவாக வெளிவரும் நிலைமைகள் சீர் செய்யப்பட வேண்டும்.

 

உண்மையான குற்றவாளியாக ஒருவர் அல்லது ஒரு குழு இனங்கானப்படுவார்களானால் அவர்கள் விடயத்தில் அரசியல் தலையீடுகளோ அல்லது அவர்களை விiவாக வெளிக் கொண்டு வரும் செயற்பாடுகளிலோ மற்றயவர்கள் ஈடுபடுவதில் இருந்து விலகிக் கொண்டு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு நீதி, நியாயங்கள் கிடைக்க வழிவகைகள் செய்வதே உண்மையான மனிதாபிமானமாகும்.

 

இலங்கையைப் பொருத்த வரை கடந்த முப்பது வருடகால யுத்த வெற்றிக்குப் பின்னர் கடந்த ஆறுவருடத்தில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என இனம், வயது வேறுபாடின்றி ஈவிரக்கமற்ற வகையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவதற்கு தண்டனையாக குற்றமிழைத்தவர்களுக்கு எந்தவித மண்ணிப்பும் இன்றி காலந் தாழ்த்தாது உடநடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டியதன் தேவை தற்போது அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட்டு அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும், அழுத்தங்களும் வழுப்பெற்றுள்ளமையை நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக உள்ளது.
இன்று எத்தனையோ பெற்றோர்களும், உடன் பிறப்புக்களும் தமது சின்னச் செல்வங்களை பரிதாபகரமாக இழந்து விட்டு கவலையும், கண்ணீரமாக இருக்கையில் ஒருசில அமைப்புக்களும், நாடுகளும் தற்போது சர்வதேச சிறுவர் தினம் என்று அதனைக் கொண்டாடுவதனை விட்டுவிட்டு அதனைத் தடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களையும், ஏனைய வழி முறைகளையும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளதே தவிர கொண்டாட்டங்களும், களியாட்டங்களும் தேவையற்ற ஒன்றாகவே பேசப்படுகின்றது.
இலங்கையில் அன்மைக்காலமாக இடம் பெற்று வரும் மேற்படி நிலைமைகளை கருத்திற் கொண்டு அனைவரும் மேற்படி விடயத்தில் ஒன்று பட்டு சிறுவர்களைப் பாதுகாக்கும் திட்டத்தில் கிராமங்கிராமமாக பாதுகாப்புக்குழுக்களை அமைத்து தமது பிள்ளைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் இடம் பெற்று வரும் மேற்படி விடயங்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனைச் சட்டத்தால் மட்டுமே குறைக்க முடியுமே தவிர ஏனைய முறைமைகளால் அதனை நிறுத்த முடியாது.

 

இந்த வகையில் இலங்கை அரசாங்கம் காலத்தைக் கடத்தி இன்னும் பல உயிர்களை இழப்பதற்கு வழிவகுக்காது மரண தண்டனைச் சட்டத்தை உடன் அமுல்படுத்துவதே காலத்தின் தேவையாகும்.