தேர்தல் மறுசீரமைப்புக்கான திருத்தச் சட்டம்:- ஆற்றைக் கடக்கும் வரையே அண்ணன், தம்பியான உறவு முறை! அதன் பின்னர் அவன் என்குச் சொந்தக்காரனல்ல என்ற நிலைமை

 

DSC00018_Fotor.எச்.சித்தீக் காரியப்பர்

  இந்த நாட்டில் வாழக் கூடிய சிறுபான்மையின மக்களின் விசேடமாக, வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் தெரிவான ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்க தமையிலான நாடாளுமன்ற ஆட்சியும் இன்று அதே சிறுபான்மை மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு வேட்டு வைக்கும் செயற்பாடுகளில் எதிர்க்கட்சியுடன் இணைந்து  கைகோர்ததுச் செயற்படுவது மிக வேதனைமிக்கதும் ஏமாற்றம் தருவதுமாகும். 

  இந்த நாட்டில் இன்றைய ஜனாதிபதியின் ஆட்சியையும் பிரதமரையும் உருவாக்கியதன் மூலம் சிறுபான்மையின மக்கள் கடந்த அரசுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கும் துரோகமிழைத்து விட்டார்கள் என்ற  காரணங்களுக்காக அவர்களைப் பழிவாங்கும் ஒரு தந்திரமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று புதிய தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் தேவை என்றும் அதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படல் அவசியமெனவும் விடாப்பிடியாக நிற்கின்றது. அத்துடன் இது இடம்பெற்ற பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தற்போதைய அரசுக்கு தேவையானவற்றைச் செய்யும் பெரும்பான்மை பலத்தை தங்களால் வழங்க முடியுமென்று கூறுமளவுக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மிக கடுமையான தன்மையுடன் செயற்பட்டு வருகிறது.

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் நோக்கத்தை அதன் ஆதரவுக் கட்சிகள் புரிந்து கொண்டாலும் அவர்களது அபிலாஷைகளுக்குப் புறம்பான நிலையில் செயற்பட முடியாத ஒரு பலவீனமான நிலைமையே இன்றைய நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பலம் நாடாளுமன்றத்தில் வீழச்சி கண்டுள்ளது. நிதியமைசசர் ரவி கருணா நாயக்கவினால் கொண்டு வரப்பட்ட மேலதிக நிதி முறிகள் தொடர்பிலான பிரேரணை ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் தோற்கடிக்கபட்ட போதே இந்த அரசின்  பெரும்பான்மை ஆதரவு தன்மையற்ற பலவீனம் வெளிப்பட்டு விட்டது.

  சிறுபான்மை இனத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை  கடித்துக் குதற முயற்சிக்கும் எதிர்க்கட்சியின் சொன்ன சொல்லைக் கேட்க வேண்டிய பிள்ளை நிலையில் இன்றைய நல்லாட்சி அரசு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபால டி சில்வாவை அவர் கட்சிசார்ந்த சிலரே “அரசின் அரைக் கொந்தராத்துக்காரர்“ என்று வர்ணித்தாலும் புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் அதனை வலியுறுத்துவதில் முன்னிற்கும் ஒருவராகவே அவர் உள்ளார். இதன்  மூலம் அவர் சிறுபான்மையின மக்களின் நியாமான பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவான ஒருவராகக் காணப்படவில்லை. 19  ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை தாங்கள் அங்கீகரிக்க வேண்டுமென்றால் தேர்தல் சீர்திருத்தமும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இன்றேல் 19 ஐ ஆதரிக்கப் போவதில்லை என்று முதலில் கூறியவர்கிள்ல் இந்த நிமால் சிறிபால டி சில்வாவும் ஒருவர்தான்.

  கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் மஹிந்த ராஜபக்க்ஷவை நிராகரித்தமைக்காக அளுந்தரப்புடன் இணைந்தே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால்  அந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசே  இந்த சூழ்ச்சிகர தேர்தர் சீர்திருத்தமாகும்.  இந்த விடயத்தில் இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவும் விலாங்கு  மீனாகவே செயற்படுகிறார் என்பதனையும் புரிந்து கொள்ளவே வேண்டும்.

  இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் நோக்கினால் கடந்த அரசு காலத்தில்   இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான பரிசாக  மஹிந்தவுக்கு தோல்வியை வழங்கிய  முஸ்லிம்களுக்கு அவர்களால் பதிலடியாக இன்று  வழங்கப்படவுள்ள நிரந்தரமான இழப்புமிக்க பரிசே இந்த புதிய தேர்தல் சீர்திருத்தம் என்று கூறலாம்.

  இதேவேளை, மேலுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் நல்லாட்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குமிடையில் எவ்வளவுதான் முரண்பாடுகள், வெட்டுக் குத்துகள் இருந்தாலும் புதிய தேர்தல் சீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து சிறுபான்மையினரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் விடயத்தில் அவர்கள் ஒற்றுமையுடனேயே செயற்படுவதனை மிகுந்த  அவதானத்துடன் நோக்க வேண்டும். பல வேற்றுமைகளின் ஊடே இதில் ஒற்றுமை காண்கின்றனர். அதவாது ஆற்றைக் கடக்கும் வரையே அண்ணன், தம்பியான உறவு முறை.கடந்த பின்னர் அவன் என்குச் சொந்தக்காரனல்ல என்ற நிலைமையே இன்று நிகழ்கிறது.

  இதேவேளை, புதிய கலப்பு தேர்தல் முறையினால் சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கு எதிராக இன்று அனைத்து சிறுபான்மை இன அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பது மிக வரவேற்கப்பட வேண்டிய விடயம். முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன  இந்த விடயத்தில் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்படுவது  பாராட்டுக்குரியது. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற  சிறுபான்மை இனக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மகாநாட்டில் மூன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு புதிய தேர்தல் முறையினால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் தங்கள் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

  “தேர்தல் முறைமையின்   மூலம் சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்  கூடிய நிலைமை ஏற்படுத்தப்படும். அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவுள்ளோம். எந்தவொரு அவசர முடிவையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. விருப்பு வாக்கு முறையை நீக்குவதை நாம் எதிர்க்கவில்லை. இருப்பினும் அதிலுள்ள நன்மைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் திருத்தமொன்றை நாம் எதிர்க்கவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது. தொகுதிவாரி தேர்தல் முறைமையில் இருக்கும் மிக மோசமான நிலைமைகளை மீண்டும் அமுல்படுத்தும் முயற்சியை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம். கலப்பு தேர்தல் முறையில் உள்ள நன்மைகளை உள்வாங்கும் அதேநேரம் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் என்பது விகிதாசாரப் பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டும் என்பது எமது விருப்பமாகவுள்ளது.“ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஜ் சார்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் நாயகமான வை. எல்.எஸ். ஹமீத் சில கருத்துகளை ஆதாரத்துடன் முன்வைத்திருந்தார்.

  “இரண்டு பிரதான கட்சிகளும் கொண்டு வர முயலும் தேர்தல் முறை மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை அடியோடு ஒழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. அவ்விரண்டு கட்சிகளும் தாம் எவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதென்றே கருதுகின்றன.   அதாவது சிறுபான்மை இனத்துக்கான மொத்த ஆசனத்தில் 35 க்கும் அதிகமான ஆசனங்களை தாம் வெற்றி கொள்வதையே பெரும்பான்மை இனக் கட்சியினர் இலக்காக கொண்டிருக்கின்றார்கள். இதற்கு எதிராக அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது சிறந்ததொரு செயற்பாடாகும்.“ என அவர் தெரிவித்திருந்தார்.

  இவ்வாறு இந்த விடயத்தில் ஒரே கருத்துடன் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றித்துச் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய பாரிய இழப்பை தவிர்த்துக் கொள்ள முடியுமென நம்பலாம். அரசியல், கொள்கை ரீதியாக முஸ்லிம் கட்சிகளிடையே வேறுபாடு காணப்பட்டாலும் இவ்வாறான சமூகம நலன்சார்ந்த விடயத்தில் ஐக்கியமாகச் செயற்படுவது பாராட்டுக்குரியது. இவ்வாறான ஐக்கியம் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களிலும் பேணப்பட வேண்டும். அதன் மூலமே சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும்  ஒன்று திரண்ட பலத்தினைக் காட்டி உரிமைகளை வென்றெடுக்க முடியும்.  அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது வெறும் சொல்லாடலுக்கான வசனம் அல்ல என்பதனை நாம்  எம்மை அடக்கி ஆண்டு  எமது உரிமைகளை நசுக்க முயற்சிப்போருக்கு காட்ட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்