நீரில் மூழ்கிய முத்து!

துளிர்த்த சிறு பசுந்தளிரே
ஊர் மணக்கும் தாளம்பூவே
வட்டுக் குருத்து அழகே- செல்லமே என்
மொட்டவிழ்ந்த தாமரையே!
கரையோடு ஒதுங்கினையோ- கண்ணே
நுரை மடியில் தூங்கினையோ.
நிலையில்லா வாழ்க்கையென்று
அலையோடு சென்றனையோ.
நீரிலே முகம் புதைத்து- தங்கமே நீ
ஏங்கி அழுகிறாயோ
மண்ணோடு தலை சாய்த்து -உயிரே உன்
மன்றாட்டம் சொல்கிறாயோ.
சமுத்திரம் மூழ்கும் வரை- எங்கள்
நேத்திரம் அழுகிறதே- தேனே 
உனை அள்ளி அணைத்து தூக்கி எடுக்க
உள்ளம் இங்கு தவிக்கிறதே.
வள்ளம் நீர் வெள்ளத்தில் கவிழும் கணம்
மான்குட்டியே
உன் தாயின் மனது எப்படித் தவித்திருக்கும்?
நினைக்கும் போதே 
என் நெஞ்சு பதறுதே, தேகம் நடுங்குதே!
சிவப்புச் சட்டையுடுத்து
நீலக் காற்சட்டை போட்ட
நிலாத்துண்டே!
நீ அழுதிருக்கமாட்டாய்.
ஒரு சிறு புன்னகையாலே 
உன் மரணத்தை அணைத்திருப்பாய்.
சொர்க்கம் உன் கண்களுக்குள்
தெரிந்திருக்கும்.
பார்…குப்புறத் தூங்கியே
உலகின் மனசாட்சியை அசைத்த
ஓர் அதிசயச் செல்வம் நீ.
போ கண்மணி! 
விண்ணகத்தின் செளபாக்யம் உனை 
மடி சேர அழைக்கிறது.
~ஸமான் முஸ்தபா. 
IMG_8014