இலங்கை – இந்திய டெஸ்ட் (போட்டோ) இணைப்பு !

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இத் தொடர் மிகமுக்கியம் வாய்ந்த  கருதப்பட்டது.


இலங்கை அணியைப் பொருத்தவரையில் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் இப் போட்டியில் வெற்றி பெற்று அவருக்கு சிறந்த வழியனுப்புதலை வழங்க இலங்கை அணி வீரர்கள் எண்ணியிருந்தனர்.

 

அந்த வகையில் இலங்கை மண்ணில் இந்திய அணி கடந்த 22 வருடங்களாக எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றதில்லை எனவே இத் தொடர் இந்திய அணிக்கும் மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி கடந்த 12 ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்தியுஸ் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அந்த வகையில் தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரியத் தொடங்கின.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியுஸ் 64 ஓட்டங்களையும் திரிமன்னே  59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குமார் சங்கக்கார 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ஓட்டங்களைப்பெற்றது.

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான் 134 ஓட்டங்களையும் அணித் தலைவர் விராட் கோலி 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கௌஷல் 5 விக்கெட்டுகளையும் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 192 ஓட்டங்களால் பின்னிலை வகிந்த இலங்கை அணி போட்டியின் 2 ஆவது நாள் தேநீர் இடைவேளையின் பின்னர்  தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

2 ஆவது இன்னிங்ஸிலும் இலங்கை அணி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

போட்டியின் 3 ஆவது நாளான நேற்றையதினம் இலங்கை அணியின் நடுத்தர துடுப்பாட் ட வரிசை இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது.

இதில் டினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார  40 ஓட்டங்களையும் மெத்தியுஸ் 39 ஓட்டங்களையும் திரிமன்னே  44 ஓட்டங்களையும் ஜெகன் முபாரக் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணிக்கு பலமமைத்தனர்.

இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக சுழலில் மிரட்டிய அஸ்வின்  4 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்திய அணிக்கு 176 என்ற இலகுவான வெற்றி இலக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி தனது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


போட்டியின் 4 ஆவது நாளான இன்றைய தினம் இலங்கை அணியின் சுழல்பந்து வீரர் ரங்கன ஹேரத் தனது மாயாஜால சுழலில் இந்திய அணி வீரர்களை கட்டிப்போட்டார்.

இதேவேளை, போட்டியின் ஆரம்பமே இந்திய அணியின் கையோங்கியிருந்த நிலையில் போட்டியின் 4 ஆவது நாள் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் போட்டியை தம்பக்கம் திருப்பினர்.

176 என்ற  இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பொடுத்தாடிய இந்திய அணி இலங்கையின் சுழலுக்கு தடுமாறி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பாக 2 ஆவது இன்னிங்ஸில் ரஹானே 36 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுழலில் இந்திய அணியை கட்டிப்போட்ட ஹேரத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களைப்பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்ட டினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முக்கியமானதும் சங்காவின் இறுதிப் போட்டியுமான 2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.