நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானது நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் – எரான் விக்கிரமரத்ன

நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானது நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் எவரும் நீதியை மீறி அதற்கு மேலாக செயற்பட முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு விசாரணையில் ஈடுபடுவதற்கான அழைப்பாணை பிறப்பித்தும் அவர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் மின்சாரக் கதிரையில் எத்தனை முறையும் அமர தயார் எனக் கூறியவர். அப்போது அவ்வாறு கூறியவர் இப்போது அழைப்பாணையை புறக்கணிப்பது எந்தவிதத்தில் நியாயம் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு விசாரணைக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்ட போது அவர் எதுவித மறுப்புமின்றி விசாரணையில் பங்கேற்றவர். அதனைப் போல் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் சரத் பொன்சேகா என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டவர்களே. அவ்வகையில் இப்பொழுது இடம்பெறுவது எவ்விதமான அரசியல் பழிவாங்கல்களும் இல்லை. இது நல்லாட்சிக்கான அடிக்கல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அண்மையில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் நடந்து கொண்ட விதமானது முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்ல அவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையானது 19 ஆவது சீர்திருத்த நடவடிக்கைக்கு சுமையாக்கும் வகையிலேயே நடந்து கொண்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.